Published : 28 Sep 2013 03:07 PM
Last Updated : 28 Sep 2013 03:07 PM

கூகுள் மாயக் கண்ணாடி

பூவே பூச்சூடவா படத்தில் நதியா அணிந்து வந்த கண்ணாடி பற்றி ஞாபகம் இருக்கிறதா? "இந்தக் கண்ணாடி வழியே பார்த்தால், ஆடையில்லாமல் தெரியும்," என்று நதியா அடித்துவிட, அவரைப் பார்த்தாலே எஸ்.வி.சேகர் ஓடி ஒளிவார். அது போன்ற அபூர்வக் கண்ணாடியை தயாரிக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, "கூகுள் ஆண்டவ"ரின் புதிய அறிமுகம். அது ஒரு மூக்குக் கண்ணாடி. புளூடூத் கருவியைவிட, கொஞ்சம் பெரியது இந்த கூகுள் கிளாஸ்.

இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால், இனிமேல் ஒவ்வொரு விஷயத்துக்கும் "கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்க" வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில், சும்மா ஒரு கண்ணசைவே போதும். கேட்டது கையில் கிடைக்கும், அதுதான் கூகுள் கிளாஸ்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. 5 மெகாபிக்ஸல் கொண்ட கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், வைஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கூகுள் கிளாஸுக்கு "ஜே" போட வைக்கின்றன.

இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, "ஒகே. கிளாஸ்" என்று சொன்னால் போதும், உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும்.

இதைக்கொண்டு பாட்டு கேட்கலாம், திசையறியலாம், வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. "டேக் எ பிக்சர்" என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். ஏன் நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும். இந்தக் கண்ணாடியின் தனித்துவம், இது சிறப்பான குரல் அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளதுதான்.

இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும். ஒரே விஷயம் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்கு ஈடாக, இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி தேவை.

இந்த கூகுள் கிளாஸில் சில பிரச்சினைகளும் உணடு. நம் கண்களுக்கு ஒரு செ.மீ. முன்னால் குறுஞ்செய்தி ஒளிர்ந்தால், முதலில் பார்ப்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே பழகிவிடும் என்கிறார்கள்.

சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. தொலைபேசிக் கருவியை கையில் எடுக்க வேண்டியதும் இல்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனம் சிதறலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதனால் மனப்பதிவு, மனித மூளைச் செயல்பாடு போன்ற பல விஷயங்களுக்கு மதிப்பு குறைந்து போகும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் தலையிடும் என்ற அச்சமும், சமூக இழுக்காக கருதப்படலாம் என்ற எதிர்மறைத்தன்மையும் கூகுள் கிளாஸுக்கு எதிரிகளாக அமையக்கூடும். இந்த இரண்டு விஷயங்களில் அது நம்பிக்கையை வென்றாக வேண்டும். இந்தக் காரணங்களால் இதைத் தடைசெய்யச் சொல்லியும் குரல் எழுப்பப்படலாம். ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடை செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கூகுளின் இந்தப் புதிய கருவி இப்போது ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறது. இன்னமும் நுகர்வோர் மாடலாக விற்பனைக்கு வரவில்லை. இப்போதைக்குப் போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கூகுளின் Glass Project Explorer Kit வழங்கப்படுகிறது. இதைப் பெறுபவர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில், கூகுள் கிளாஸ் அடுத்த வருடம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. ஒரு லட்சம்.

கூகுள் கிளாஸுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நவீன தகவல்தொழில்நுட்பக் கருவிகள் துறையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை போல, இது மற்றொரு பிரம்மாண்ட தொழில்போட்டியைத் தொடங்கி வைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x