Last Updated : 30 Dec, 2013 12:00 AM

 

Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

நாளைய உலகம்

ஆப்பிளின் புது முயற்சி!

வீட்டில் இயக்கத்திலிருக்கும் மின்விளக்கு , மின்விசிறி போன்றவற்றை நிறுத்த மறந்து வெளியில் செல்வது அடிக்கடி நடக்கும் விஷயம். இந்த அஜாக்கிரதையால் மின்சார பில் ஷாக் அடிக்கும் விதமாக வந்து தாக்குவதும் உண்டு. இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற ‘சிஸ்டம் அண்ட் மெத்தட் டிடர்மைனிங்’ என்னும் புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் அந்த சாதனத்தின் மூலம் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னும் இயக்கத்திலிருக்கும் மின்சாதனங்களை தானாக நிறுத்த முடியும். இதற்கு நம் கைவசம் ஒரு ஐ-போனும் வீட்டில் அதன் ரிசீவர் கருவி ஒன்றும் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள மின்சாதனங்கள் அனைத்தையும் இந்தக் கருவியோடு இணைத்துவிடலாம். வீட்டில் இருக்கும் கருவிக்கும் நம் கையிலிருக்கும் ஐ-போனுக்கும் இடையே எப்போதும் ஒயர்லெஸ் தொடர்பு இருக்கும். நாம் வீட்டை விட்டு வெளியே செல்கையில், அந்த தகவலை கையிலிருக்கும் ஐ-போன், வீட்டிலிருக்கும் ஆப்பிள் கருவியிடம் சொல்லிவிடும். இதன் மூலம் தேவையில்லாமல் எரியும் மின்சாதனங்களை அது தானாகவே அணைத்துவிடும்.

ஹெல்ப் அவுட்:

ஆர்க்குட்,ஜி +,யூட்யூப் , ஹேங் அவுட்டை தொடர்ந்து ஹெல்ப் அவுட் எனும் புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது கூகிள். இதன் மூலம் நமக்கு தெரியாத விஷயத்தை தெரிந்தவர்களிடமிருந்து நேரடியாக கற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் பயணத்தில் இருக்கும்போது உங்கள் கார் திடீரென நின்றுவிட்டால், உடனே ஹெல்ப் அவுட்டை தொடர்புகொண்டு அதில் உள்ள வல்லுநரிடம் ஆலோசனை கேட்டு காரில் உள்ள சிக்கலை நாமே தீர்க்கலாம். இது வீடியோ டுட்டோரியல் போல் இருக்கிறதே, இது ஏற்கெனவே யூடியூப்பிலேயே இருக்கிறதே என்கிறீர்களா? யூடியூப்பில் உள்ளவை வெறும் வீடியோக்கள் மட்டும்தான். ஆனால் ஹெல்ப் அவுட்டில் வரும் வல்லுநர்கள் நேரடியாக நம்மை இயக்குவார்கள்.இதுதான் இதிலுள்ள சிறப்பு. வெவ்வேறு மாதிரியான கட்டணங்களின் மூலம் இதை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3. கொசு vs கொசு!

‘இந்த கொசுத்தொல்லையை தாங்க முடியலையே’ என்ற புலம்பல் சிந்தாதிரிப்பேட்டையில் மட்டுமல்ல ஸ்பெயினிலும் அதிகமாகவே இருக்கிறது. கொசுவிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி , மஸ்கிடோ பேட், ரிப்பெலெண்ட் என்று எவ்வளவோ முயற்சி செய்தும் நம்மைப்போல் அங்குள்ள மக்களும் தப்பிக்க முடியவில்லையாம். தவிர அங்கிருக்கும் ஆலிவ் பழங்களும் கொசுக்களால் அழிந்து வருகிறதாம். இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக கொசுவை ஏவி கொசுவை கொல்லும் புது முயற்சியில் இறங்கியுள்ளனர் ஸ்பெயின் விஞ்ஞானிகள். அதன்படி ஸ்பெயினின் மரபியல் விஞ்ஞானிகள் சிலர், இங்கிலாந்து மரபியியல் நிபுணர்களுடன் சேர்ந்து ஆலிவ் பழக்கொசு என்னும் புது வகையறா கொசுக்களை உற்பத்தி செய்து ஊருக்குள் விட்டுள்ளனர். இவை எல்லாமே ஆண் கொசுக்கள்.ஆலிவ் பழ மரங்களில் உட்காரும் இந்த கொசுக்கள் அங்கே வரும் பெண் கொசுக்களுடன் இணையுமாம். அப்படி இணையும்போது ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் அதைக் கொன்று விடுகிறது என்று சொல்கிறார்கள்.ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்களோ, இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வெற்றியான வெப்சைட்!

இன்று செல்போன் எப்படி எல்லோருடைய கைகளிலும் இருக்கிறதோ அதேபோலவே இணையதளங்களும் ஆகிவிட்டன. இன்று பலரும் பிளாக்கர், வேர்ட்ப்ரஸ் என்று பல தளங்களில் இருக்கிறார்கள்.அதையே பிற்காலத்தில் தங்களின் இணையதளங்களாகவும் மாற்றிவிடுகிறார்கள். அப்படி நாம் புதிதாக உருவாக்குகிற இணையதளத்தின் மூலம் அடுத்தவர்களை எப்படி கவர்வது என்பதை கண்டறிய பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில், ஒரு விஷயத்தை எழுதுகிறபோது ஒரே பத்தியாக எழுதுபவர்களை விட வெவ்வேறு பத்திகளாக பிரித்து எழுதுபவர்களுடைய பக்கங்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள் என்று கண்டறியப் பட்டுள்ளது. எழுத்துக்களோடு சில நிமிட வீடியோக்களையும் அவ்வப்போது பதிவேற்றுவதும் அவசியமாம். இவற்றையெல்லாம் செய்தால் ஒரு இணையதளம் வெற்றிகரமானதாகிவிடும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x