Published : 09 Oct 2014 05:51 PM
Last Updated : 09 Oct 2014 05:51 PM
இந்திய கிராமங்களை இணையத்தால் இணைக்கும் முயற்சிக்கு ஃபேஸ்புக் உதவத் தயாராக இருப்பதாக, டெல்லியில் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இணைய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று (வியாழக்கிழமை) காலை இந்தியா வந்தார்.
இணைய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, "திறனுக்கு வரம்பே இல்லாத அற்புதமான நாடு இந்தியா. சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்தியா சிறந்த களம். அந்த வகையில் ஃபேஸ்புக் வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இங்கு மென்மேலும் பல வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
இது தொடர்பாக நான் நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக பேசவுள்ளேன். இந்த நாட்டின் கிராமங்களை இணையத்தின் மூலம் இணைத்திட அவர் முனைப்பு காட்டிவருகிறார். இந்தத் திட்டத்தில் ஃபேஸ்புக் எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து நாங்கள் திட்டமிடவுள்ளோம்.
இந்தியாவில் 24.3 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 10 கோடி மக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள். ஆனால், இங்கு இன்னும் 100 கோடி மக்கள் இணைய வசிதி இல்லாத நிலையில் உள்ளனர்.
விவசாயிகள், பெண்கள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கான செயலியை (App) உருவாக்க 10 லட்சம் டாலர்களை அளிக்க நாங்கள் தயாராகவுள்ளோம். இதன்மூலம் புதிய பலன் தரும் செயலிகள் பல்வேறு மொழிகளில் உருவாக வழிக் கிடைக்கும்.
2007-ஆம் ஆண்டு முதலே நாங்கள் பல்வேறு மொழிகளில் உபயோகப்படும் செயலிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஃபேஸ்புக்கில் 65%-க்கு மேலான பதிவுகள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில்தான் பகிரப்படுகிறது. இவற்றில் 10 இந்திய மொழிகள் இடம்பெறுகின்றன. இப்படி இந்திய மொழிகளுக்கு சிறப்பு இருக்க, இங்கு கிராமங்களை இணையத்தின் மூலம் இணைப்பதில் நெட்வொர்க், செலவு, பொருளடக்கம் என மூன்ற தடைகள் உள்ளன.
ஆனால், தொழில்நுட்பம் என்பது சமூதாயத்தில் வளர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வேறுபட்டதாக இருக்கக் கூடாது. இந்த இடைவெளியை நாம் அறுத்து எறிய வேண்டும். உலகுக்கு அடுத்த தலைமுறை கொண்டுவர முன்னேற்ற அறிவியலை இந்தியர்கள் எந்த காலத்திலோ செய்துள்ளனர் என்றால், இந்த இடைவெளியை நீக்குவது மிக எளிமையானதுதான்.
சமூகத்துக்கு தொழில்நுட்பங்கள் சேவைபுரிய வேண்டும். இணைய தொடர்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல. தொழில்நுட்பத்தின் சேவை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால் மனிதர்களுக்கு இடையே வேறுபாடே இருக்காது. இந்த இணைய மாநாட்டின் மூலம் இதற்கான முயற்சிகள் விரைவில் நடக்க வேண்டும்" என்றார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்.
இந்தியா வந்துள்ள மார்க் ஸக்கர்பெர்க் நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சத்திப்பு தகவல் தொழில்நுட்ப துறையினரிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க், இணைய சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT