Published : 24 Dec 2013 06:34 PM
Last Updated : 24 Dec 2013 06:34 PM
காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்திருக்கிறார். இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.
செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய கேமில் புள்ளிகள் தான் எல்லாம். இதில் உள்ள வண்ண புள்ளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். 60 நொடிகளுக்குள் எத்தனை வண்ண புள்ளிகளை இணைக்க முடிகிறது என்பது தான் இந்த விளையாட்டின் சவால். ஆர்வத்தை தூண்டி அடிமையாக்கி விடும் கேம் என்று சொல்லப்படும் டாட்ஸ் விளையாட்டை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் நண்பர்களை போட்டிக்கு அழைத்தும் விளையாடலாம்.
இந்த விளையாட்டை நேசிக்கும் எத்தனையோ பேரில் அமெரிக்க இளம்பெண் கேசியும் ஒருவர். கேசி வேறு யாருமல்ல, நம்ம ஷானின் தோழி. கேசியை காதலித்து வந்த ஷான் அவரை மணம் செய்து கொள்ள விரும்பினார். தனது காதலை அவரிடம் சொல்லிவிடவும் தீர்மானித்தார். ஆனால் வழக்கமான முறையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தனது காதலை சொல்ல விரும்பினார். இதற்கு அவர் தேர்வு செய்த வழி தான் டாட்ஸ் கேம். கேசி, டாட்ஸ் விளையாட்டு பிரியை என்பதால் அந்த விளையாட்டு வடிவிலேயே காதலை தெரிவித்தால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார் என நம்பினார்.
இந்த நம்பிகையோடு டாட்ஸ் விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தன் காதலை சொல்லக்கூடிய வகையில் டாட்ஸ் கேமின் விஷேச வடிவை உருவாக்கித்தர முடியுமா என்று கேட்டிருக்கிறார். விளையாட்டின் முடிவில், என்னை மணந்து கொள்ள சம்மதமா? என்று கேட்கும் வகையில் அமைய வேண்டும் என்று இமெயில் வாயிலாக கோரியிருந்தார். டாட்ஸ் குழுவும் இதற்கு ஒப்புக்கொண்டு சிறப்பு டாட்ஸ் விளையாட்டை உருவாக்கி கொடுத்தது.
ஷானும் காதலியை இரட்டை ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் உற்சாகத்தோடு அந்த விளையாட்டை கேசியிடம் ஆட கொடுத்திருக்கிறார். கேசி காத்திருக்கும் ஆச்சர்யம் பற்றி தெரியாமல் டாட்ஸ் கேம் ஆடும் ஆர்வத்தோடு அதை விளையாடத் துவங்கினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்துக்கு வந்ததும் காதல் வாசகம் வர அவருக்கே ஆனந்த அதிர்ச்சி. அந்த நிமிடம் பார்த்து ஷான் அவர் முன் மண்டியிட்டு காதலை சொல்ல இன்னும் அசந்து போயிருக்கிறார்.
இன்டெர்நெட் கால காதல் கதை.
இப்படி தான் ஷான் காதலைச் சொன்னார்: >http://www.youtube.com/user/weplaydots?feature=watch
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment