Last Updated : 28 Oct, 2014 05:13 PM

 

Published : 28 Oct 2014 05:13 PM
Last Updated : 28 Oct 2014 05:13 PM

ட்விட்டரில் நாத்திகர்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வு

பொதுவாக உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும் நாத்திகர்கள், ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வு ஒன்று.

கத்தார் கம்ப்யூட்டிங் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் கேம்டன் ரட்கர்ஸ் ஆடம் ஒகுலிக்ஸ் கார்ஸியன் பல்கலைக்கழகமும் இணைந்து சமூக வலைதளத்தில் வேறுபட்ட மனிதர்களின் பங்கேற்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக வலைதளங்களில் நண்பர்களை இணைக்கும் பழக்கம் கொண்ட நாத்திகவாதிகள், தங்களது மத அடையாளம் குறித்த விவரத்தை மாறுபட்ட கோணத்தில் தெரிவித்தாலும், அவர்கள் பெரும்பாலும் மத கோட்பாடுகளில் ஈடுபாடு உடையவர்களிடமே அதிகம் இணைப்பில் உள்ளனர்.

இதற்கான ஆய்வில் ட்விட்டர் வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் கிறிஸ்தவர், இஸ்லாமியர், யூதர், பவுத்தர், இந்து போன்ற பல்வேறு வகையினரை தேர்வு செய்தும், அவர்களோடு நாத்திகர்களின் கணக்குகளும் ஒப்பிடப்பட்டன.

அதன்படி மத ஆர்வம் உள்ளவர்களைக் காட்டிலும், நாத்திகர்களின் ட்விட்டர் பயன்பாடுகளும், அவரது ட்வீட்கள், ரீ-ட்வீட்களும் அதிகப்படியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட முனைவர் லியூ சேன் கூறும்போது, "உலக அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் நாத்திகர்கள் பெரும்பாலான அளவில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ளனர். மற்றவர்களை ஒப்பிடும்போது இவர்களுக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவர்களின் ட்வீட்களும் ரீ-ட்வீட்களும் அதிக அளவில் உள்ளன. மத நம்பிக்கை உடையவர்களுடன் இவர்கள் நட்பு கொண்டாலும், இவர்கள் அவர்களது நண்பர்களை தேர்வு செய்வதில் கவனம் கொண்டவர்களாக உள்ளனர்.

மனிதர்கள் பலவகையாக இருந்தாலும், அவர்கள் நாம் நினைக்கும் அளவில் வேறுபட்டவர்களாக இல்லை என்பதை இந்த ஆய்வின் முடிவில் நான் உணர்கிறேன்" என்றார்.

மேலும், "இந்த ஆய்வின்படி, 'காதல்', 'வாழ்க்கை', 'வேலை', மற்றும் 'மகிழ்ச்சி' ஆகிய பொதுவான குறிச்சொல்லையே பெரும்பாலான ட்விட்டர்வாசிகள் பயன்படுத்துகின்றனர். பல பழைய விஷயங்களை நாம் தாண்டி வந்துவிட்டதாக நினைத்தாலும், பொதுவாக மக்கள் அனைவரும் தங்களது தினசரி வாழ்வியல் குறித்து கவலையடைந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

இதில் உலக அளவில் பார்க்கும்போதும் எவ்வித மாற்றமும் இல்லை. காதல், நல்ல வாழ்க்கை, வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் குறித்த கவலை, நம்மை சார்ந்த மற்றும் சாராத மற்றவர்கள் குறித்த கவலை அனைவரிடமும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை எதிலும் மாற்றம் இல்லை” என்று சேன் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x