Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள கணினிகளை உடைய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கணினிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் கணினியில் உள்ள விவரங்களை நமக்கே தெரியாமல் பிறர் சேகரிக்க சமூக விரோதிகள் மற்றும் 'ஹேக்கர்கள்' என்று அழைக்கப்படும் இணைய குறும்பர்களால் உருவாக்கப்படுபவைதான் இந்த தீங்கிழைக்கும் மென்பொருள்கள். இதனை ஆங்கிலத்தில் 'மால்வேர்' என்று அழைப்பார்கள்.
இத்தகைய தீங்கிழைக்கும் மென்பொருள்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இவற்றால் ஒரு நாட்டில் உள்ள கணினிகள் தாக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு சீர்குலைக்கப்படும். இந்த வகையான மென்பொருள்களால் 'சைபர்' குற்றம் எனப்படும் கணினி பயன்பாடு சார்ந்த குற்றங்கள் அதிகரிக்கும். எனவே, இந்த வகையான மென்பொருள்களின் உருவாக்கத்தைத் தடுக்கவும், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் சர்வதேச அளவில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. 'வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஆய்வாளர்கள் சங்கம்' எனும் சர்வதேச அமைப்பு இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆண்டு இவ்வமைப்பின் 16வது மாநாடு சென்னையில் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்வமைப்பின் தலைவர் ஆலன் டையர் ‘தி இந்து'விடம் கூறும்போது, "தீங்கிழைக்கும் மென்பொருள்கள் உடைய கணினிகளை அதிகமாகக் கொண்ட நாடுகள் பட்டியலில் துருக்கி முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன" என்றார்.
இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், சுமார் 20 ஆண்டுகளாக 'சைபர் பாதுகாப்பு' துறையில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வரும் கேசவர்தனன் கூறுகையில், “பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் கணினி பயன்பாடு மற்றும் நிர்வாகத்துக்கான பணியாளர்களை மட்டும் கொண்டிருக்கின்றன. ஆனால் சைபர் பாதுகாப்புக்கு என தனியான தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லை. அதனால் இணையதளங்கள் தாக்கப்படும் போது செய்வதறியாமல் திகைக்கின்றனர். மேலும், அவற்றில் இருந்து எப்படி மீள்வது என்பதும் எதிர்காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதும் தெரிவதில்லை. எனவே, ஒவ்வொரு நிறுவனமும் இதற்கென தனியாக மனித வளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
தீங்கிழைக்கும் மென்பொருள்களைத் தடுப்பது, குறைப்பது தொடர்பாக நம் தொழில்நுட்ப சட்டங்களில் நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது இன்னும் சில காலங்களில் தெரிய வரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT