Published : 11 Nov 2013 09:24 PM
Last Updated : 11 Nov 2013 09:24 PM
இணையத்தில் நடப்பு ஆண்டின் முன்னணி சொல், அதாவது உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் எது தெரியுமா? இணைய பக்கங்களில் அடிக்கடி தோன்றக்கூடிய 404 எனும் பதமே இந்த ஆண்டின் முன்னணி சொல்லாக தேர்வாகி உள்ளது. இந்தப் பட்டியலில் ட்விட்டர் பிரபலமாக்கிய ஹாஷ்டேக் (#) மூன்றாவது இடத்தில் உள்ளது.
2013-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில், ஆண்டின் சிறந்த போக்குகளை (டிரெண்ட்) சுட்டிக்காட்டும் பட்டியல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்த வரிசையில் ஆண்டின் முன்னணி சொற்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சொற்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை குலோபல் லாங்குவேஜ் மானிட்டர் எனும் அமைப்பு வெளியிட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 14-வது ஆண்டாக வெளியாகி உள்ள 2013-ம் ஆண்டுக்கான பட்டியலில் 404 என்னும் பதம் முதல் இடத்தையும் தோல்வி எனும் அர்த்தத்தை குறிக்கும் ஃபெயில் எனும் சொல் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த இரண்டு சொற்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. 404 என்னும் சொல் (அல்லது எண்), பொதுவாக இணையப் பக்கம் தோன்றாமல் தொழில்நுட்ப சிக்கலுக்கு இலக்காகும்போது தோன்றுவது. 'மன்னிக்கவும்... இந்த பக்கத்தை காணவில்லை' என்பது போன்ற வாசகத்துடன் 404 சிக்கல் செய்தி தோன்றும்.
ஃபெயில் என்பது பொதுவாக ஒரு திட்டம் அல்லது செயலின் தோல்வியை குறிக்க பயன்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்த ஆண்டு எந்த அளவுக்கு சிக்கலானதாக இருந்திருக்கிறது என்பதை உணர்த்துவதாக கருதலாம்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது ட்விட்டரில் குறிப்பிட்ட தலைப்பிலான செய்திகளை ஒரே தொகுப்பாக பார்க்க உதவும் குறியீடான ஹாஷ்டேக்!
கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிசின் ட்விட்டர் முகவரியை குறிக்கும் @பாண்டிபிக்ஸ் (@Pontifex) நான்காவது இடத்தையும் ஆப்டிக் (optic) எனும் சொல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதிகம் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் போப் பிரான்சிஸ் (Pope Francis)பெயர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா கேர், என்.எஸ்.ஏ மற்றும் ஸ்நோடன் அடுத்த இடங்களில் வருகின்றன.
2013-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களின் பட்டியலும் தனியே வெளியிடப்பட்டுள்ளது. நச்சு அரசியல் எனும் பொருள் படும் டாக்சிக் பாலிடிக்ஸ் (Toxic Politics) முதலிடத்திலும் பெடரல் ஷட்டவுன் (Federal Shut down - அமெரிக்க அரசு முடக்கம்) இரண்டாவது இடத்திலும் உள்ளன. புவி வெப்பமாதலை குறிக்கும் குலோபல் வார்மிங்கிற்கு மூன்றாவது இடம்.
உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசும் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியலை குலோபல் லாங்குவேஜ் மானிட்டர் வெளியிட்டு வருகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெற குறிப்பிட்ட சொல் குறைந்தது 25,000 முறையேனும் மீடியாக்கள் மற்றும் இணைய வெளியில் பயன்பட்டிருக்க வேண்டும். ஆங்கில மொழியின் பயன்பாடு மற்றும் முன்னேற்றத்தை அறிய இந்தப் பட்டியல் உதவுவதாக கருதப்படுகிறது.
இந்த அமைப்பின் கணக்கு படி 2014 துவக்கத்தில் ஆங்கில மொழியில் புழக்கத்தில் உள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை 1,025,109.8 ஆக இருக்கும். (ஒரு கணிப்பு தான்). இது போன்ற ஆய்வு மற்றும் பட்டியல் தமிழ் மொழிக்காகவும்கூட உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஆண்டின் முன்னணி சொற்கள் பட்டியலை காண: >Global Language Monitor’s 14th Annual Survey of Global English
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT