Last Updated : 16 Mar, 2018 11:35 AM

 

Published : 16 Mar 2018 11:35 AM
Last Updated : 16 Mar 2018 11:35 AM

ஸ்மார்ட்போனைத் தூர வையுங்கள்!

நவீன வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அலாரம் செட் செய்து அதிகாலை கண் விழிப்பது முதல், செய்திகளைத் தெரிந்துகொள்ள, ஷாப்பிங் செய்ய, உணவை ஆர்டர் செய்ய, தகவல்களைத் தேட எனப் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கைகொடுக்கின்றன. செயலிகள் துணையோடு ஸ்மார்ட்போனிலேயே கற்றுக்கொள்ளவும் செய்யலாம். இன்னும் பலவிதங்களில் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த முடிகிறது.

ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இது கவனச்சிதறலுக்கான சாதனமாகவும், நேரத்தை வீணடிக்கும் வழியாகவும் இருப்பதுதான் பிரச்சினை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை போனிலிருந்தே அணுக முடிவதால், நேரம் காலம் இல்லாமல் போனைப் பயன்படுத்த பெரும்பாலானோர் பழகிவிட்டனர். பலருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒரு மோகமாகவே மாறியிருக்கிறது. ஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், சிலவற்றைப் பின்பற்ற வேண்டும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நோட்டிபிகேஷன் வேண்டாம்

நோட்டிபிகேஷன் வசதி பயனுள்ளது என்றாலும், கவனச்சிதறலில் அதற்குத்தான் முதலிடம். சமூக ஊடக சேவைகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அறிவிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்பால், தேவையில்லாமல் அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் தூண்டுதல் ஏற்படுகிறது. எனவே, முதலில் நோட்டிபிகேஷன் வசதியைத் துண்டிப்பது நல்லது. எப்போது தேவையோ அப்போது மட்டும் போனை எடுத்துப் பார்க்க இதுவே சிறந்த வழி. அதோடு, அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதும் நல்லது.

செயலி நீக்கம்

உள்ளங்கையிலிருந்தே சமூக ஊடக சேவைகளை அணுக முடிவது நல்லதுதான். ஆனால், அதிக நேரம் செலவாகிறது எனத் தெரிந்தால், தயங்காமல் சமூக ஊடக சேவை செயலிகளை நீக்கிவிடுவது நல்லது. அவசரத் தேவை எனில், போனில் பிரவுசர் மூலம் இந்த சேவைகளை அணுகலாம். இதேபோலவே பயன்படுத்தாத எல்லாச் செயலிகளையும் நீக்கிவிடுங்கள்.

சுய கட்டுப்பாடு

போனை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு நீங்களே ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மதிய உணவு இடைவேளையின்போது, உணவு சாப்பிடும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது, சமூக நிகழ்வுகளில், படுக்கையறையில் போனை எடுப்பதில்லை என உறுதிகொள்ளுங்கள். இரவு படுக்கச்செல்லும் முன், இணைய டேட்டா வசதியைத் துண்டித்துவிடுங்கள்.

கைக்கடிகாரம் போதும்

அலுவலக நேரத்தில் போனைப் பக்கத்தில் வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். அல்லது ஏரோபிளேன் மோடில் போட்டு வையுங்கள். அதேபோல, கைக்கடிகாரம் அணிந்து செல்லுங்கள். நேரம் பார்ப்பதற்காக போனை எடுக்காமல், கடிகாரத்திலேயே நேரம் பார்த்துக்கொள்வது பணியில் கவனம் செலுத்த உதவும்.

நண்பர்களின் உதவி

ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உங்கள் நோக்கத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களை அறியாமல் போனைக் கையில் எடுக்கும்போது அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தலாம். அவர்களுக்கும் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு உண்டாகலாம்.

இந்த வழிமுறைகளோடு, ஸ்மார்ட்போன் மோகத்திலிருந்து விடுபட போனை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தும் வழக்கத்தையும் மேற்கொள்ளலாம். இதற்கான உதாரணங்கள்:

பேசுங்கள்

சும்மாயிருக்கும் நேரத்தில் போனில் சமூக ஊடகங்களில் உலவ நினைப்பதைவிட, நீண்ட நாட்களாக பேசமால் இருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து அவரிடம் பேசுங்கள். குறிப்பிட்ட ஒரு கேள்வியைக் கேட்டு அவரிடம் உரையாடுங்கள். சில நிமிடங்கள்தாம் பேச இருப்பதாகக் கூறிவிட்டே பேசலாம். நட்பைப் புதுப்பித்துக்கொண்டதுபோலவும் இருக்கும்.

திட்டமிடுங்கள்

ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பதிவிடுவதற்குப் பதில் உங்கள் அன்பானவர்கள் பற்றி யோசியுங்கள். குடும்ப உறுப்பினர்களைத் திரையரங்குக்கோ உணவு விடுதிக்கோ அழைத்துச்செல்லத் திட்டமிடலாம். போனிலேயே முன்பதிவு செய்யலாம். உறவுகளுடன் கூடுலாக நேரத்தைச் செலவிடுங்கள்.

கேளுங்கள்

போன் திரைதான் மிகப் பெரிய எதிரி. இதற்கு மாற்றாக ‘பாட்காஸ்டிங்’ எனப்படும் குரல் வழி இணைய ஒலிபரப்புகளைக் கேட்கலாம். ஆடியோ நூல்களைக் கேட்கலாம். உங்கள் குரலில் செய்திகளைப் பதிவுசெய்யலாம். உதாரணத்துக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, குழந்தைகளுக்கான செய்திகளைப் பதிவுசெய்து அதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

முதலீடுக்கு யோசியுங்கள்

முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் தனிநபர் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவற்றில் நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் படம் பார்ப்பதைவிட, ஓய்வு கால நிதித் திட்டமிடல் தொடர்பான குறிப்புகளை வாசிப்பது நல்லது அல்லவா!

எழுதுங்கள்

சிறந்த விஷயங்கள் அலையடிக்கின்றனவா? அதை போனில் உள்ள குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். இதற்கென பிரத்யேகச் செயலிகளும் இருக்கின்றன. இது ஒரு பழக்கமாக மாறினால், உங்கள் போனையே ஒரு நாட் குறிப்பைப் போலப் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது இந்தக் குறிப்புகளைத் திரும்பிப் பார்த்து ஊக்கம் பெறலாம்.

சொல் புதிது

டிக்‌ஷனரி செயலிகளை இயக்கி, புதிய சொற்களுக்கான பொருள்களை அறிந்துகொள்ளலாம். தினம் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வது என வைத்துக்கொள்ளலாம். தெரிந்துகொள்ளும் சொல்லைப் பயன்படுத்தியும் பார்க்கலாம். பாக்கெட் போன்ற செயலியைப் பயன்படுத்தி, கட்டுரைகளை வாசிக்கலாம். இணையத்தில் உலவும்போது கண்ணில்படும் நல்ல கட்டுரைகளைப் பின்னர் வாசிக்க இந்தச் செயலி உதவுகிறது.

மூளைக்கு வேலை

செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். உடற்பயிற்சிக்கு உதவும் செயலிகளைத் தரவிறக்கம் செய்து, பிட்னசில் கவனம் செலுத்தலாம். ஸ்மார்ட்போனைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், நேரம் வீணாவதைத் தவிர்ப்பதுடன் செயல்திறனையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x