Published : 02 Mar 2019 01:12 PM
Last Updated : 02 Mar 2019 01:12 PM

குழந்தைகளின் விவரங்கள் முறைகேடாக சேகரிப்பு: டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா

குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் பிரபல வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது.

மியூசிக்கலி செயலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் இந்த உத்தரவை அளித்துள்ளது. குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில் அதிகபட்சமாக விதிக்கப்பட்ட அபராதம் இதுவாகும்.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வரிசையில் டிக் டாக்கும் இணைந்தது.

முன்னதாக மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த வீடியோ செயலியையும் கடந்த 2017-ல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் 13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், செயலிகளைப் பயன்படுத்தும் முன்னர் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அமெரிக்கச் சட்டத்தின்படி அவசியம். ஆனால் அதை டிக் டாக் கடைபிடிக்கவில்லை.

குழந்தைகளின் பெயர்கள், இ-மெயில் முகவரிகள் மற்றும் பிற  சொந்த விவரங்களைப் பெறும் முன்னர், பெற்றோரிடம் அனுமதி பெறவேண்டிய கட்டாயத்தை டிக் டாக் செயல்படுத்தவில்லை. தங்களின் செயலியை ஏராளமான குழந்தைகள் பயன்படுத்துவது தெரிந்தும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவில்லை.

இந்த அபராதம் குழந்தைகளைக் குறிவைக்கும் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் இணையதளங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான சட்டத்தை மீறும் நிறுவனங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்'' என்று அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x