Published : 26 Sep 2014 01:19 PM
Last Updated : 26 Sep 2014 01:19 PM
இன்னும் ஸ்மார்ட் வாட்சுகளே முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்கள் வரிசை கட்டிவிட்டன. ஏற்கனவே கூகுள் கிளாஸ் வந்துவிட்டது. சீனத்து கூகுளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட் கிளாஸ் மாதிரியை உருவாக்கியுள்ளது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்குக்கு ஸ்மார்ட் கிளாஸைக் களமிறக்கியிருக்கிறது.
பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் கிளாஸில் செயல்படக்கூடிய ஆப்ஸ்களை உருவாக்கும் முயற்சியில் சோனி இறங்கியுள்ளது. வடிவமைப்பு நேர்த்தி இல்லாவிட்டாலும் சோனியின் ஸ்மார்ட் கிளாஸ் ஹோலோகிராஃபிக் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள லென்ஸ் 85 சதவீதம் ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஹோலோகிராம் நுட்பம் கொண்ட இந்த லென்ஸ்கள் காண்பவர் நோக்கும் பொருள் தொடர்பான தகவல்களைப் பார்க்கும் காட்சி மீதே ஓட வைக்கும். ஸ்மார்ட்போனுடன் இணைந்து இது செயல்படுகிறது.
ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் பொருந்தக்கூடியதாக இது இருக்கும். இமேஜ் சென்சார், 3-மெகாபிக்சல் காமிரா, கைரோஸ்கோப், மின்னணு காம்பஸ் மற்றும் மைக் உள்ளிட்ட அம்சங்களை இந்த கிளாஸ் கொண்டிருக்கிறது. சோனி இப்போதே இந்த கிளாசை மெய்நிகர் வடிவில் டெவலப்பர்களுக்கு வெள்ளோட்டம் காட்டி வருகிறது.
ஆண்டு இறுதியில் டெவலப்பர் வர்ஷன் மற்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நுகர்வோருக்கான மாதிரிகள் சந்தைக்கு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT