Published : 27 Aug 2018 12:40 PM
Last Updated : 27 Aug 2018 12:40 PM
இசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் ரோபோவைத் தயாரித்திருக்கிறது டெக்சாஸைச் சேர்ந்த ஏ பிளஸ் ட்ரோன்ஸ் நிறுவனம். ரோபோவின் 2 கால்களிலும் 360 டிகிரி சுழலும் வகையிலான மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேன்ஸ் பாட் என இந்த ரோபோவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
உடல்நல டாட்டூ
உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, நம்மை சுற்றியுள்ள காற்று அளவுக்கதிகமாக மாசுபட்டிருப்பது போன்ற பல்வேறு தகவல்களுக்கேற்ப நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்ட நீக்கத்தக்க வகையிலான டாட்டூ. லாஜிக்கல் இங்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டாட்டூவை கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்லோஸ் ஒல்குவின் வடிவமைத்துள்ளார்.
களிமண் ஸ்பீக்கர்
கலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் களிமண்ணை பயன்படுத்தி ஸ்பீக்கர் தயாரித்திருக்கிறது ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த டாக்குமெண்ட்ரி டிசைன் நிறுவனம். சிறிய பானை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்பீக்கருக்கு மேபு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சாம்சங் ஸ்மார்ட் ஹோம்
அமேசான், கூகுள், ஆப்பிள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட் ஹோம் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைலான கேலக்ஸி நோட் 9 கடந்த வியாழன் அன்று அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதே மேடையில் ஸ்மார்ட் ஹோம் கருவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவிக்கு கேலக்ஸி ஹோம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரல்வழி கட்டளைகளை புரிந்துகொள்ளும் பிக்ஸ்பை என்ற மென்பொருள் இந்தக் கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சோனி நாய்க்குட்டி ரோபோ
1999-ம் ஆண்டு நாய்க்குட்டியின் தோற்றத்தில் ஐபோ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம். பல்வேறு காரணங்களால் 2006-ம் ஆண்டு இதன் விற்பனையை நிறுத்தியது. இந்நிலையில் மனிதர்களின் முகங்களை புரிந்துகொள்ளுதல், மின்னும் கண்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தனது ஆளுமைத் திறனை தானே வடிவமைத்தல் போன்ற பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் இந்த ரோபோவை சோனி நிறுவனம் தற்பொழுது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை 2,899 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT