Last Updated : 20 Jul, 2018 12:13 PM

 

Published : 20 Jul 2018 12:13 PM
Last Updated : 20 Jul 2018 12:13 PM

யூடியூப் சேனல்களைத் தேடலாம் வாங்க!

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்களும் கோடிக்கணக்கான பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாகக் கொடிகட்டிப் பறக்கின்றனர். யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களைக் கண்டறிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிந்துகொள்ள விரும்பினால் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்.

யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறதுதான். ஆனால், யூடியூப் வசதி வீடியோக்களைத் தேடுவதற்கானது என்பதால் தனிப்பட்ட சேனல்களைக் கண்டறிய அதிகம் உதாவது. அதிலும் பயனாளிகள் தங்கள் ரசனைக்கேற்ப சேனல்களைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினால், யூடியூப் தேடல் போதுமானதாக இல்லை என நினைக்கலாம்.

வெகுமக்களின் கவனத்தைப் பெறாமல் போகும் நல்ல படங்கள்போலவே, யூடியூப்பிலும் பரவலாக அறியப்படாத அருமையான சேனல்கள் அநேகம் இருக்கின்றன. இணைய உலகம் பெரும்பாலும் வைரலாகப் பரவும் வீடியோக்களையும், லட்சக்கணக்கில் பார்வைகளைக் குவிக்கும் வீடியோக்களையுமே கவனிப்பதால், நல்ல சேனல்கள் அதிக ஆதரவு இல்லாமல் யூடியூப் கடலில் மூழ்கி விடுகின்றன. இப்படி யூடியூப்பில் மறைந்திருக்கும் மாணிக்கங்களைத் தேடி கண்டுபிடிக்க உதவுவதற்கென இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சில:

சேனல் கிராலர் (https://www.channelcrawler.com/)

அறியப்படாத, கண்டுபிடிக்கப் படாத யூடியூப் சேனல்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் தளம் இது. இந்தத் தளத்தில் பயனாளிகள் பலவிதங்களில் யூடியூப் சேனல்களைத் தேடலாம். பெயர், சேனல் வகை, மொழி, நாடு போன்றவற்றைக் குறிப்பிட்டு அதற்கேற்பத் தேடலாம். இவை தவிர சந்தாதாரர்கள் எண்ணிக்கை, பார்வையாளர்கள் எண்ணிக்கை, மொத்த வீடியோக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் தேடலாம். குறிப்பிட்ட தலைப்பிலான வீடியோக்களை விலக்கிவிட்டுத் தேடும் வசதியும் இருக்கிறது. அரிதான சேனல்களைத் தேடுவதோடு புதிய சேனல்களையும் இந்தத் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

சேனல்ஸ்ஹண்ட் (https://www.channelshunt.com/ )

யூடியூப் சேனல்களுக்கான தேடியந்திரம்போல இது அமைந்திருக்கிறது. சேனல்களுக்கான வழிகாட்டியாகவும் இது விளங்குகிறது. எளிமையான முகப்பு பக்கத்தைக் கொண்ட இந்தத் தளத்தில் யூடியூப் சேனல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு, செய்தி, இசை, கேமிங், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என நீளும் இந்தப் பட்டியலிலிருந்து விரும்பிய தலைப்பைத் தேர்வு செய்து சேனல்களைப் பார்க்கலாம்.

மொத்தம் 1,204 சேனல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சேனலை ‘கிளிக்’ செய்தால், அவற்றுக்கான சுருக்கமான அறிமுகம், சந்தாதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களைப் பார்க்கலாம். அறிவியல் அல்லது கணிதம் தொடர்பான சேனல்கள் தேவையெனில், அதற்கான வகையில் ‘கிளிக்’ செய்தால் போதுமானது. ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மத்தியில் தேடும் நிலை இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய சேனல்கள் பரிந்துரைக்கப்படுவது ஆசுவாசம் அளிக்கலாம். இதில் மின்னஞ்சல் முகவரியை அளித்து சந்ததாரராக இணையலாம்.

டியூப் ஸ்பார்க் (https://tubespark.com/ )

சுவாரசியமான முறையில் யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்துகொள்ள டியூப் ஸ்பார்க் உதவுகிறது. குறிப்பிட்ட பிரிவில் உள்ள ரசிகர்களை மட்டும் கவர்ந்த வீடியோக்களை இது பரிந்துரைக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு வீடியோ மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. பிடித்திருந்தால் அதை ‘கிளிக்’ செய்யலாம். இல்லையெனில் அடுத்த வீடியோவுக்குப் போய்விடலாம். வீடியோ பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என ஆதரவு தெரிவிக்கலாம். இவை வாக்குகளாகக் கருதப்பட்டு இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் வீடியோக்கள் முன்னிறுத்தப்படும். வீடியோக்களுக்கு வாக்களிக்க உறுப்பினராக இணைய வேண்டும். வீடியோக்களை உறுப்பினர் ஆகாமலேயே பார்க்கலாம்.

சேனல் வாட்ச் (https://www.reddit.com/r/ChannelWatch/)

இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் சமூகத் தளம் சார்ந்த சேவை இது. ரெட்டிட் உறுப்பினர்கள் விவாதிக்காத விஷயமே கிடையாது. ரெட்டிட் உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட யூடியூப் சேனல்களை இதில் பட்டியலாகப் பார்க்கலாம். குறிப்பிட்ட சேனல்கள் தொடர்பான உறுப்பினர்களின் கருத்துகளைப் படிக்கலாம். விதவிதமான சேனல்களை அறிமுகம் செய்துகொள்ள எளிய வழி இந்தத் தளம்.

சில் டிவி (https://andchill.tv/)

சில் டிவி தளம் கொஞ்சம் புதுமையானது. இந்தத் தளத்தில் பார்வை அறையை உருவாக்கிக்கொண்டு மற்றவர்களுடன் இணைந்து வீடியோக்களைப் பார்க்கலாம். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள அறைகளிலும் இணைந்து வீடியோக்களைப் பார்க்கலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இந்த சேவைகள் தவிர, ஸ்மால் யூடியூபர் சோன் (http://smallyoutuberzone.com/) தளம் அதிகம் புகழ்பெறாத யூடியூப் பயனாளர்களை அறிமுகம் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x