Published : 13 Mar 2025 03:58 PM
Last Updated : 13 Mar 2025 03:58 PM
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது ஸ்பேடெக்ஸ் (Space Docking Experiment) பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் சந்திரயான் 4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு வெற்றிகரமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை வெற்றிக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொகுப்புகளை இஸ்ரோ அதன் எக்ஸ் பக்கத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது. அவை, SDX-2-ஐ பிரிப்பது, திட்டமிட்டபடி கேப்சர் லிவர் 3-ஐ விடுவிப்பது, SDX-2-லிருந்து கேப்சர் லிவரின் தொடர்பைத் துண்டிப்பது, பிடிப்புகளை விடுவிக்கும் கட்டளைகளை இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் வழங்குவது உள்ளிட்ட செயல்முறைகள் உள்ளடங்கியது. இஸ்ரோவின் இந்த வெற்றியைப் பாராட்டி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் மகிழ்சியில் உள்ளனர். ஸ்பேடெக்ஸ் நம்பமுடியாத அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி, பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன், சந்திரயான் 4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட எதிர்கால லட்சியங்களுக்கு சுமுகமான பாதையை அமைத்துக் கொடுக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான உற்காகம் உத்வேகமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை திட்டம், கடந்த 2024 டிசம்பர் 30-ம் தேதி சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து தொடங்கியது. ‘சேஷர்’ மற்றும் ‘டார்கெட்’ என்று அறியப்படும், SDX01 மற்றும் SDX02 செயற்கை கோள்களை விடுவிக்கும் பணி ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய நான்காவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், மற்ற ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் பரிசோதனைகள் மார்ச் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். இஸ்ரோவின் கூற்றுப்படி, ஸ்பேடெக்ஸ் திட்டம் என்பது செலவு குறைந்த ஒரு திட்டப் பணியாகும். பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் டாக்கிங்கை நிறுவுவதே இதன் நோக்கம். ஒரு பொதுவான நோக்கத்தை அடைய பல ராக்கெட்களை விண்ணில் ஏவுவதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment