Published : 20 Jun 2018 11:36 AM
Last Updated : 20 Jun 2018 11:36 AM
வா
ட்ஸ்அப்பிலோ சாட்டிங்கிலோ இமோஜியைச் சேர்த்துக்கொள்வது அரட்டையைச் சுவாரசியப்படுத்தும். ஆனால், பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த இமோஜியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேசக் குழு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டுமல்ல; இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிக்க உலகளாவிய போட்டியையும் அறிவித்துள்ளது.
இமோஜி சேவை
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக உரையாடல்களிலும் அரட்டைகளிலும் உருவ எழுத்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இந்த உருவ எழுத்துகள் புதிய மொழியாகவே உருவாகி இருக்கின்றன. பெரும்பாலும் நகைச்சுவை நோக்கில் பயன்படுத்தப்பட்டாலும், சொற்களுக்குப் பதில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இமோஜிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இமோஜியை விளையாட்டுச் சங்கதியாக நினைத்துவிட முடியாது.
இவை இணைய உரையாடலிலும் தகவல் தொடர்பிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆகவே, புதிய இமோஜிகளை உருவாக்குவதற்கான தேவையும் அதிகரித்துவருகிறது. அதேநேரம், புதிய இமோஜிகளைத் தனியாகவோ எந்த நிறுவனமோ இஷ்டம்போல அறிமுகம் செய்துவிட முடியாது. புதிய இமோஜிகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு இணைய எழுத்துருக்களை நிர்வகிக்கும் யூனிகோட் கூட்டமைப்பு வசம் உள்ளது. எனவே, புதிய இமோஜிக்கான கோரிக்கையை இந்த அமைப்பிடம் சமர்ப்பித்து, அது ஏற்கப்படக் காத்திருக்க வேண்டும்.
இப்படிப் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட புதிய இமோஜிகள் அண்மையில் அறிமுகமாகத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரியில் இதற்கான பட்டியலை யூனிகோடு கூட்டமைப்பு வெளியிட்ட நிலையில், நிறுவனங்கள் புதிய இமோஜிகளைத் தங்கள் இயங்குதளங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன.
பூகம்பக் குறியீடாக...
அந்த வகையில்தான் இப்போது, பூகம்பத்தை உணர்த்த ஒரு பிரத்யேக இமோஜி தேவை எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வைத்திருப்பது சாதாரண அமைப்பு அல்ல; சர்வதேச விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழு ஒன்று. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், யூனிகோடு கூட்டமைப்பில் சமர்ப்பிக்க உள்ள பூகம்ப இமோஜியை உருவாக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. இதற்காக ‘இமோஜிகுவேக்’ (https://www.emojiquake.org/ ) எனும் இணையதளத்தையும் அமைத்துள்ளது. ஜூலை 14-ம் தேதிவரை வடிமைப்பாளர்கள், இமோஜி ஆர்வலர்கள் இந்தத் தளத்தில் பூகம்ப இமோஜிக்கான வடிவமைப்பைச் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படும் ஐடியாக்களை ‘#emojiquake’ எனும் ஹாஷ்டேக் மூலம் பின்தொடரலாம்.
பூகம்ப இமோஜி எளிமையானதாக, எல்லோருக்கும் புரியக்கூடியதாக, தனித்தன்மைமிக்கதாக, பூகம்பத்தை உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூகம்ப இமோஜி அவ்வளவு முக்கியமா? இணைய உரையாடலில் இமோஜிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதோடு, பல விஷயங்களை எளிதாக உணர்த்தவும் கைகொடுக்கின்றன. பத்துச் சொற்கள் தேவைப்படும் இடங்களில் ஒரு இமோஜி கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது.
எல்லாம் சரி, பூகம்ப இமோஜியால் என்ன பயன்?இமோஜிகள் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேகமாக வளர்ந்தும்வருகின்றன. அதே நேரத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகள் பூகம்பப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பூகம்பம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில், அதற்கான பிரத்யேக இமோஜி பேருதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஒரே மொழி வழக்கு
பூகம்பம் போன்ற பேரிடர்களின்போது, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மக்கள் அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை வைத்தே பூகம்பம் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள முடிவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பூகம்பத்தை உணர்ந்த மக்கள் சமூக ஊடகங்களில் அது பற்றிய தகவல்களைப் பகிர்வதை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் கண்டறியலாம்.
ஆனால், சமூக ஊடகப் பகிர்வில் உள்ள சிக்கல் என்னவெனில், இவை பல மொழிகளில் வெளியாகும்போது அவற்றை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள வழியில்லை. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான், பூகம்பத்துக்கு ஒரு இமோஜி தேவை என வலியுறுத்துகின்றனர். பூகம்பப் பாதிப்பு தகவல் எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும், அதனுடன் பூகம்ப இமோஜி இணைக்கப்பட்டிருந்தால், அதை வைத்தே எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம்.
சூறாவளி, புயல், எரிமலை போன்ற இயற்கை நிகழ்வுகளைக் குறிக்க இமோஜி இருக்கும்போது, பூகம்பத்தைக் குறிக்க மட்டும் இமோஜி இல்லை. இந்த நிலை மாறவே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பூகம்பப் பாதிப்புகளைக் கண்டறிவதில் மட்டுமல்லாமல் மீட்பு பணிகள், நிவாரண உதவிகளை ஒருங்கிணைப்பதிலும் பூகம்ப இமோஜி கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT