Published : 10 Nov 2024 05:27 AM
Last Updated : 10 Nov 2024 05:27 AM
புதுடெல்லி: விண்ணில் 7 வழிகாட்டி செயற்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் நேவிகேஷன் சிக்னல்களை வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விண்வெளித்துறையின் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், இந்தியா தனது சொந்த நேவிகேஷன் அமைப்பை (நேவிக்) உருவாக்க இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இதற்காக புதிய எல்1பேண்டுடன் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதில் ஒரு செயற்கைக்கோள் ஏற்கெனவே விண்ணில் ஏவப்பட்டுவிட்டது. மற்ற 6 செயற்கைக்கோள்கள் இனிமேல் ஏவப் படும். விண்ணில் ஏற்கெனவே ஏவப்பட்டுள்ள நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் எல்5 மற்றும் எஸ் பேண்டில் செயல்பட்டன.
நமது சொந்த நேவிக் அமைப்புமற்ற நேவிகேஷன் அமைப்புகளைவிட மிக துல்லியமாக இருக்கும். இதன் பயன் அனைவருக்கும் சென்றடைவதை நோக்கி அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இன்ஸ்பேஸ் மையம், விண்வெளி கொள்கை மற்றும் அந்நிய நேரடிமுதலீட்டுக் கொள்கை ஆகியவை விண்வெளித்துறைக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது.
எங்களின் அடுத்த நோக்கம் விண்வெளி சட்டத்தை கொண்டுவருவதுதான். இதற்கான வரைவு சட்டத்தை தயாரித்துள்ளோம். ஆலோசனைக்குப்பின் இது மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்.
உலகளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலர்என்ற அளவில் உள்ளது. இதில் பெரும் பங்கை கைப்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற் காகவே இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொழில்நுட்பம் இன்னும்2 ஆண்டுகளில் தனியார் துறைக்குவழங்கப்படும். தமிழகத்தின்குலசேகரபட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறியராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட் ஆகியவற்றின் ராக்கெட்டுகள், சிறிய செயற்கைக்கோள்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை நிறைவு செய்யும். இஸ்ரோவும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 செயற்கைக்கோள்களை ஏவ முயற்சிப்போம்.
விண்வெளித்துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதோடு திறமைசாலிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே விண்வெளித்துறையில் முழுநேரப் பட்டப்படிப்பைகொண்டுவர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இன்ஸ்பேஸ் மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பவன் கோயங்கா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT