Published : 26 Aug 2024 02:19 PM
Last Updated : 26 Aug 2024 02:19 PM

ஒன்பிளஸ் 10 புரோ, 9 புரோ போன்களின் மதர்போர்டு செயலிழப்பு: பயனர்கள் புகார்

சென்னை: ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 புரோ மற்றும் 9 புரோ மாடல் ஸ்மார்ட்போன்களின் மதர்போர்டு செயலிழப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை சமூக வலைதள பக்கத்தில் பயனர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவித சப்போர்ட்டையும் ஒன்பிளஸ் நிறுவனம் வழங்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு மாடல் போன்களின் மதர்போர்டு திடீரென க்ராஷ் (Crash) ஆவதாக சிலர் தெரிவித்துள்ளனர். சில பயனர்களுக்கு போன் மிகவும் ஸ்லோவாக இயங்குவதாகவும், அதிகம் சூடாவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், போனை ரீ-ஸ்டார்ட் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் ஒன்பிளஸ் 10 புரோ 5ஜி போனை பயன்படுத்தி வரும் பயனர் ஒருவர் ஒன்பிளஸ் சர்வீஸ் மையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரது போனை பழுது நீக்க ரூ.42,000 செலவாகும் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.44,499 என விற்பனை ஆகிறது. தனது போனில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்த பிறகு பீப் ஒலி கேட்பதாகவும், அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்பதாவும் அந்த பயனர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் பயனர்கள் தங்கள் போன்களின் வாரண்டியை நீட்டிக்க வேண்டுமென்றும், இலவசமாக பழுது நீக்கி தர வேண்டுமென்றும் சொல்லி வருகின்றனர். இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக, டிஸ்பிளேவிலே கிரீன் லைன் சிக்கல் காரணமாக லைஃப்டைம் வாரண்டியை ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஒன்பிளஸ்: சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x