Published : 09 May 2024 06:14 AM
Last Updated : 09 May 2024 06:14 AM
சென்னை: குறைந்த செலவில் உயர் திறனுடன் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மைக்ரோசிப் சாதனத்தை இந்திய தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குறைந்த செலவில் உயர்திறன்மிக்க புதிய மைக்ரோசிப் சாதனத்தை (‘Secure IoT’) வணிகரீதியாக உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் மற்றும் கியாஸ் மீட்டர், மின் வாகன பேட்டரி மேலாண்மை உள்ளிட்டவற்றில் பெரிதும் பயன்படும்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி பெற்ற மைண்ட்குரோவ் நிறுவனத்தில் ஐஐடிமாணவர்களும் இணைந்து இந்த மைக்ரோசிப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். இதன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஐஐடி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கலந்துகொண்டு பேசியதாவது: புதிய மைக்ரோசிப் தயாரிப்பு குழுவில் ஐஐடி மாணவர்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் சூழலில் இந்த மைக்ரோசிப்பை தயாரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் வரும் காலத்தில் செமிகண்டக்டர் உற்பத்திதுறை மிக வேகமாக வளரும்.குறைந்த செலவில் உயர்தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோசிப் சாதனத்தை டாடா குழுமம், மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆட்டோமொபைல், எல் அண்ட் டி உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவானமைக்ரோ புராஸசர் சக்தி சாதனத்தின் 2 வர்த்தக சோதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். இதற்கு அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது உருவாக்கப்பட்டு மைக்ரோசிப் சாதனத்துக்கும் வர்த்தகரீதியாக அதிக சந்தை வாய்ப்புகள் உருவாகும்.
அந்த வகையில் இந்த திட்டத்துக்கு நிதியுதவி அளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, மத்திய கல்வித்துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment