Published : 11 Apr 2024 05:57 PM
Last Updated : 11 Apr 2024 05:57 PM
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறாக வேலை செய்கிறது என்பதைப் பார்த்து தான் ஆச்சர்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். “சேக்ஷ்ஸ்பியரின் மிகவும் கடினமான படைப்புகளை எப்படி சாட் ஜிபிடி புரிந்துகொள்ளும் என நான் சந்தேகப்பட்டேன். ஆனால், சாட் ஜிபிடி அதை மிக நேர்த்தியாக செய்து கொடுத்துவிட்டது” என்று ஏஐ தொழில்நுட்பம் பற்றி அவர் வியந்து பேசியுள்ளார்.
கடினமான கூற்றுகளை எப்படி ஏஐ புரிந்து கொள்கிறது என தான் வியப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தக் கூடிய வேலை இழப்புகள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளார். “Unconfuse Me with Bill Gates” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேனுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, இருவரும் ஏஐ தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலவரம் பற்றி பேசினார்கள்.
அந்த உரையாடலின்போது சாம் ஆல்ட்மான் சொன்னது என்ன? - சாம் ஆல்ட்மேன், “ஏஐ தொழில்நுட்பம் எட்ட வேண்டிய நுணுக்கங்கள் இருக்கின்றன. அந்த நுணுக்கங்களை அடைய சில நுட்பமான சவால்களை அவிழ்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். மனித மூளை எப்படி வேலை செய்கிறது என்பதற்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளில் உள்ள சவால்களுக்கு இடையேயான தொடர்பை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதனை சீக்கிரம் சாத்தியப்படுத்துவோம். நான் அதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.
காலப்போக்கில் ஏஐ தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டு அதன் செயல்திறன் அதிகரிக்கப்படும். ஓபன் ஏஐ நிறுவனம் GPT-1-ஐ நாங்கள் உருவாக்கியபோது அது எப்படி செயல்படுகிறது, ஏன் செயல்படுகிறது என்ற ஆழமான புரிதல் கூட எங்களுக்கு இல்லை” என்றார்.
பில் கேட்ஸ் சொன்னது என்ன? - பில் கேட்ஸ் கருத்துப் பகிரும்போது, சிக்கலான சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஏஐ தொழில்நுட்பத்திடம் இருப்பதைப் பற்றிப் பேசினார். கல்வி, சுகாதாரத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சீரமைப்புகளைப் பற்றிப் பேசினார். அதேபோல் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் வேலை இழக்கும் அபாயம் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
“நான் மலேரியா ஒழிப்பில் திறம்பட செயல்படுகிறேன். அதற்கான தகுதியான நபர்களை அமர்த்தி அதில் முதலீடுகளை செய்கிறேன் என்று நான் பெருமிதம் கொள்ளும்போது ஏஐ என்னிடம் “நீங்கள் போய் சிறு பிள்ளைகளுக்கான டென்னிஸ் விளையாடுங்கள்... என்னிடம் மலேரியா ஒழிப்புக்கு தீர்வு இருக்கின்றது. நீங்கள் மெல்ல சிந்திக்கும் திறன் கொண்டவர்” என ஏஐ கூறுகிறது. அப்போது எனக்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறது. என் வேலையை ஏஐ பறித்துக் கொள்ளுமோ என பயந்தேன்” என்று ஏஐ பயன்பாடு மூலம் ஏற்படக் கூடிய வேலை இழப்பைப் பற்றி கவலை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT