Last Updated : 01 Jul, 2014 11:57 AM

 

Published : 01 Jul 2014 11:57 AM
Last Updated : 01 Jul 2014 11:57 AM

ஆர்குட்-டுக்கு அஞ்சலி: கூகுள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர்குட்டை நினைவிருக்கிறதா? இணைய உலகம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட இந்த சமூக வலைப்பின்னல் சேவையை இனி நிரந்தரமாக மறந்துவிடும் நிலை ஏற்படப்போகிறது. ஆம், ஆர்குட் சேவையை வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஆர்குட் பயனாளிகளுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான். ஆனால் முற்றிலும் எதிர்பாராத செய்தி அல்ல. ஆர்குட்டுக்கு பிறகு கூகுள், கூகுள் பிளஸ் சமூக வலைப்பின்னல் சேவையை அறிமுகம் செய்து, அதிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆர்குட்டின் நாட்கள் எண்ணப்பட்டு வந்ததாகவே வைத்துக்கொள்ளலாம்.

கூகுளுக்கே கூட இது கஷ்டமான முடிவாகத்தான் இருக்கும். காரணம், கூகுள் சமூக வலைப்பின்னல் சேவையில் முதலில் அடியெடுத்து வைத்தது ஆர்குட் மூலம்தான். 2004-ல் ஆர்குட் அறிமுகமானது. அதாவது, ஃஃபேஸ்புக் அறிமுகமான அதே ஆண்டு!

கூகுளில் ஒரு சலுகை உண்டு. ஊழியர்கள் தங்களது 20 சதவீத நேரத்தை விருப்பம்போல தங்கள் சொந்த முயற்சிகளில் செலவிடுவதற்கான அனுமதிதான் அது. இந்த சலுகையின் பயனாக ஊழியர் ஒருவர் உருவாக்கிய சேவையைதான் கூகுள் ஸ்வகரித்துக் கொண்டது. ஊழியரின் பெயரையே (Orkut Büyükkökten) இந்த சேவைக்கும் வைத்தது. இப்படிதான் ஆர்குட் அறிமுகமானது.

சமூக வலை முழுவதும் ஃபேஸ்புக் பக்கம் சாய்ந்துவிட்டாலும் பிரேசிலிலும் இந்தியாவிலும் ஆர்குட் கொடி கட்டிப்பறந்த காலம் உண்டு. குறிப்பாக, பிரேசிலில் இது நம்பர் ஒன்னாக திகழந்தது. ஃபேஸ்புக் போன்றது என்றாலும், ஆர்குட்டில் உருவாக்கப்பட்ட குழுக்கள் துடிப்பான இணைய சமூகங்களாக இருந்தன. இந்தக் குழுக்களில் சில துவேஷம் பரப்ப பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் இருந்தாலும் இவை தீவிர நட்புறவை கொண்டிருந்தன.

ஆர்குட்டில் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களின் நம்பகத்தன்மை போன்றவற்றை மதிப்பிடும் வசதி இருந்தது. அதுமட்டும் அல்ல, ஆர்குட்டில் ஒருவருடைய அறிமுக பக்கத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இப்படி பல தனித்தன்மைகள் கொண்டிருந்தாலும் ஆர்குட் ஃபேஸ்புக் அலையில் பின்னுக்குத்தள்ளப்பட்டுக் கொண்டே வந்தது. பின்னர் ஜி-பிளசும் சேர்ந்து கொண்டது.

இப்போது பத்தாண்டுகளுக்கு பிறகு ஆர்குட்டை நிறுத்திக்கொள்ளப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதியிடன் இந்த சேவையை மூடிவிடுவோம் என்று கூகுள் தனது ஆர்குட் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பி குறிப்பிட்டுள்ளது.

அதற்கு முன்னர் இல்லாத வகையில் ஆர்குட் குழுக்கள் உரையாடலையும் தொடர்புகளையும் ஏற்படுத்தி தந்ததாக குறிப்பிட்டுள்ள கூகுள், யூடியூப், பிளாகர் மற்றும் ஜி-பிளஸ் மூலம் உலகம் முழுவதும் அவை சார்ந்த சமூகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்குட் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் அதற்கு விடை கொடுக்க தீர்மானித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

ஆர்குட் பயனாளிகள் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் தகவல்களை கூகுள் டேக்கவுட் மாற்றிக்கொள்ளலாம். இனி புதிய உறுப்பினர்களும் சேர முடியாது. ஆனால், ஆர்குட் சமூகங்களை மட்டும் ஆவணமாக பாதுகாக்கப் கூகுள் உறுதி அளித்துள்ளது. இதில் இடம்பெற விரும்பாத ஆர்குட் உறுப்பினர்கள் இதில் இருந்து விலகி கொள்ளும் வசதியையும் அறிவித்துள்ளது.

ஆக, ஜியோசிட்டிஸ் துவங்கி இணைய உலகம் விடை கொடுத்த எத்தனையோ சேவைகளின் பட்டியலில் ஆர்குட்டும் சேரப்போகிறது. இணைய வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்திதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x