Published : 29 Sep 2023 08:33 PM
Last Updated : 29 Sep 2023 08:33 PM

AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை!

பிரதிநிதித்துவப் படம்

ஜனித்தவர்கள் மரணிப்பது இயற்கை. அதனை பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அன்பானவர்களை மிஸ் செய்வோம். அவர்களது நினைவுகளை நம் நெஞ்சத்தில் தாங்கியபடி வாழ்வினை கடக்கிறோம்.

இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் பெருந்துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் எதுவும் சாத்தியம் என்பது தினந்தோறும் நிரூபணமாகி வருகிறது. அந்த வகையில், காலஞ்சென்ற அந்த உறவுகளை உயிர்ப்பிக்க செய்யும் மாயையை செய்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம். கடந்த காலங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், உயிர்நீத்த அன்பான நெஞ்சங்களை சந்திக்க முடியும் என்ற செய்தியை நாம் கேட்டதுண்டு.

2020-ல் தென் கொரியாவை சேர்ந்த Munhwa Broadcasting Corporation (MBC) என்ற தொலைக்காட்சி நிறுவனம் அட்வான்ஸ்டு விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக இதை சாத்தியமாக்கி இருந்தது. இந்தச் சூழலில் அதை விஞ்சும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களை விர்ச்சுவல் உருவில் உயிர்ப்பிக்க முயன்றுள்ளன ஏஐ சார்ந்து இயங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

உயிரிழந்தவர்கள் ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது. இருந்தாலும், அவர்களது குணாதிசயங்களில் சிலவற்றை தொழில்நுட்பத்தின் துணையுடன் உள்ளடக்க இந்நிறுவனங்கள் முயல்கின்றன என்பதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். இது அன்பானவர்களை மிஸ் செய்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும்.

ரீ-மெமரி: உயிரிழந்தவர்கள் உயிருடன் இருக்கும்போது சொல்லிய, பகிர்ந்தவற்றை மட்டுமே கொண்டு ஏஐ துணைக் கொண்டு புதிய ஒளிப்படத்தை உருவாக்கும் முயற்சிதான் ரீ-மெமரி. இது அவர்கள் பேசிய பல மணி நேர வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டீப்பிரெயின் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய கன்டென்ட்கள் எதையும் தாங்கள் உருவாக்குவதில்லை என இந்நிறுவனம் உத்தரவாதம் தருகிறது. இதேபோல ஸ்டோரி ஃபைல் எனும் நிறுவனமும் இயங்கி வருகிறது. இதற்கு சில லட்சங்கள் செலவு பிடிக்கும் எனத் தெரிகிறது. இந்த முயற்சி உலக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றால் செலவு குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கார் விபத்தில் தனது நண்பரை இழந்த யூஜினியா குய்டா என்பவர், நண்பரின் நினைவாக அவரது டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு ‘ரோமன்’ எனும் சாட்பாட்டை 2015-ல் உருவாக்கினார். அதனுடன் அரட்டை அடிப்பது குய்டாவுக்கு ஆறுதல் தந்தது. தன்னை போலவே தனிமையில் தவிப்பவர்களுக்கு ஒரு ஏஐ துணை இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் யோசித்தார். அந்த எண்ணத்தின் வெளிப்பாடு ‘ரெப்லிகா’ எனும் ஏஐ தளத்தை உருவாக்கினார். இதன்மூலம் பயனர்கள் நட்பு ரீதியாக ரெப்லிகா தளத்தில் ஏஐ சாட்பாட் உடன் பேசலாம்.

கடந்த 2022-ல் உயிரிழந்தவர்களின் குரலை மிமிக் செய்யும் முயற்சியை அமேசானின் அலெக்சா வடிவமைப்புக் குழு முன்னெடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அலெக்ஸாவின் தலைமை விஞ்ஞானி ஒருவரும் உறுதி செய்திருந்தார்.

விர்ச்சுவல் குளோன்: சோம்னியம் ஸ்பேஸ் எனும் நிறுவனம் விர்ச்சுவல் ஏஐ குளோன்களை உருவாக்க உதவுகிறது. உயிருடன் இருக்கும்போதே இதை செய்யலாம் என்கிறது அந்நிறுவனம். இதன்மூலம் ஒருவர் மரணித்த பிறகும் அவரது நண்பர்கள், உறவினர்கள் அவரது ஏஐ குளோன் உடன் பேச முடியும். ஆனால், இது தனிநபர்களின் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் முயற்சி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் இதுபோல விர்ச்சுவல் குளோன் அல்லது ஏஐ அவதார்களை உருவாக்க குரல் பதிவு, வீடியோ மாடல் மற்றும் ட்ரான்ஸ்க்ரிப்ட் என பெரிய அளவில் டேட்டா தேவைப்படுகிறது. இதன் மூலம் மனிதர்கள் உடல் அளவில் பிரிந்து இயற்கையுடன் கலந்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் வாழலாம் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒருவரது சிந்தனை மற்றும் என்னத்துக்கு அழிவே இல்லை என சொல்லப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் இந்த விந்தையை சிலர் வரவேற்கும் நேரத்தில், சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். ஏஐ அவதாரை நம்ப முடியாது என்பது அவர்களது கருத்தாக உள்ளது. முக்கியமாக அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமை தங்களிடம் இல்லை என கருதுகின்றனர்.

| தொடர்வோம் |

முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” - இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x