Published : 06 Sep 2023 09:40 AM
Last Updated : 06 Sep 2023 09:40 AM
கோவை: கணினியுடன் 20 மொழிகளில் பேசி வேண்டியதை பெற்றுக்கொள்ள உதவும் ‘ஏஐ பாரத்’ செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி தெரிவித்தார்.
கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனர் சண்முகநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கங்கா மருத்துவமனையின் இயக்குநர் கனக வல்லி தலைமை வகித்தார். இயக்குநர்கள் மருத்துவர்கள் ராஜசபாபதி, ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி ‘இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: இந்தியாவில் ஆதார் கார்டு கேஒய்சியில் தொடங்கி இன்று டிஜிட்டல் உருமாற்றம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டில் சேவைத்துறையின் வர்த்தகம் 250 பில்லியன் டாலர். இதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
ஒருபுறம் சிறந்த டிஜிட்டல் கட்டமைப்பு மறுபுறம் தொழில் நுட்பத்துறையில் திறன்மிக்க இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இவை அனைத்தும் நமக்கு பெரிய பலம். ‘ஸ்டார்ட் அப்’ துறையில் இந்தியா வியக்கத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2023-ல் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.
தற்போது ‘ஏஐ’ என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்கள் ‘ஏஐ பாரத்’ என்ற செயலி மூலம் முதல் கட்டமாக 20 இந்திய மொழிகளில் பேசவும், எழுதவும் உதவும் தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். இதனால் கணினியுடன் பேசி உங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள முடியும்.
‘ஏஐ’ என்பது தொழில் நுட்பத்துறைக்கு மட்டுமின்றி குழந்தைகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ‘ஏஐ’ மூலம் கற்றுக்கொடுக்கும்போது மாணவ, மாணவிகள் சிறப்பாக கற்க முடியும். தாய் மொழியில் சிறப்பாக கல்வி கற்க உதவுவதில் ‘ஏஐ’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேற்கத்திய நாடுகளில் விளம்பர செயல்பாடுகளில் தரவுகளை (டேட்டா) அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் சிறு வணிக நிறுவனம் கூட தரவுகளை கொண்டு வங்கிகளில் கடனுதவி பெறுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் தரவுகள் மூலம் நாம் அடைந்துள்ள வளர்ச்சியாகும்.
‘பாஸ்டேக்’ மூலம் நெடுஞ் சாலைத்துறை அதிக வருவாய் ஈட்ட தொழில் நுட்பம் உதவுகிறது. அதிக எண்ணிக்கையில் வரி செலுத்துபவர்களை கொண்டிருப்பதை மட்டும் பெருமையாக கருத முடியாது. தொழில் நுட்ப வளர்ச்சி கட்டமைப்பில் அனைவரையும் கொண்டு வருவதே வெற்றியாகும். ஆதார் அட்டை மூலம் மொபைல்போன் வாங்கலாம், வங்கி கணக்கு தொடங்கலாம், தொழில் தொடங்க இந்தியா மற்றும் வெளி நாடுகளில் நிதியுதவி பெறலாம்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அனைவருக்கும் கிடைத்த வாய்ப்பு. டிஜிட்டல் உருமாற்றம் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT