Published : 24 Jul 2023 03:03 PM
Last Updated : 24 Jul 2023 03:03 PM
சான் பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தின் லோகோவை மாற்றினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். பாரம்பரிய நீலக் குருவிக்கு பதிலாக ‘X’ என லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இதனை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார்.
இந்தச் சூழலில் ட்விட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார். அது குறித்து ட்வீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.
வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெறமுடியும் என தெரிகிறது. குறிப்பாக நிதி சார்ந்த சேவைகளும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது.
— Elon Musk (@elonmusk) July 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT