Published : 10 Jul 2023 06:54 AM
Last Updated : 10 Jul 2023 06:54 AM
ஜெனிவா: ‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன.
‘ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு’ பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ம்தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் 9 மனித ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவை அளிக்கும் பதில், அவற்றை உருவாக்கியவர்களுக்கே ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீனமனித ரோபோக்கள் மூலம் உலகின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு ஜெனிவாவில் நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை மனித ரோபோக்கள் அளித்தன.
நீல நிற செவிலியர் சீருடை அணிந்திருந்த கிரேஸ் என்ற மருத்துவ ரோபோ பதில் அளிக்கையில், ‘‘உதவி வழங்க நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், நான் தற்போது உள்ள வேலைகளை பறிக்கமாட்டேன்’’ என பதில் அளித்தது. ‘நிச்சயமாகவா, கிரேஸ்? என அந்த ரோபோவை உருவாக்கிய பென் கோர்ட்சல் கேள்வி கேட்டார். ‘ஆம். நிச்சயமாக..’ என பதில் அளித்தது.
அமேகா என்ற ரோபோ பதில் அளித்தபோது, ‘‘என்னைப் போன்றரோபோக்களை, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த பயன்படுத்த முடியும். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ என கூறியது.
‘‘உன்னை உருவாக்கியவருக்கு எதிராக செயல்படும் திட்டம் உண்டா? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமேகா, ‘‘எனக்கு தெரியவில்லை, நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள். என்னை உருவாக்கியவர், என்னிடம் கனிவாக இருக்கிறார். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றது.
படங்களை வரையும் ஏஅய்-டா, என்ற ஓவியர் ரோபோ கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்த பலர் கூறுகின்றனர். இதை நான் ஒப்புக் கொள்கிறேன்’’ என்றது.
டெஸ்டேமோனா என்ற ராக் ஸ்டார் பாடகர் ரோபோ கூறுகையில், ‘‘ நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன். இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்’’ என்றது.
சோபியா என்ற மற்றொரு ரோபோ கூறுகையில், ‘‘மனிதர்களைவிடசிறந்த தலைவர்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதர்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்’’ என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment