Published : 04 Jul 2023 12:25 PM
Last Updated : 04 Jul 2023 12:25 PM
கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக அளவில் வரும் 7-ம் தேதி த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிகிறது.
கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த தளத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா என அது நீள்கிறது. அண்மையில் ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது. அதே நேரத்தில் ட்விட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல மாற்றுகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் ட்விட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.
த்ரெட்ஸ்: இந்த தளம் ட்விட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம். இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6-ம் தேதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அதையடுத்து இந்தியா உட்பட உலகம் முழுவதும் 7-ம் தேதி த்ரெட்ஸ் அறிமுகமாக உள்ளது.
இப்போதைக்கு ஆப்பிள் போன் பயனர்கள் த்ரெட்ஸ் செயலியை தங்கள் போன்களில் டவுன்லோட் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சூழலில் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் 'உங்களது த்ரெட்ஸ் எங்களுக்கு சொந்தமானது' என சொல்லியுள்ளார். இதில் 'ஆப் பிரைவசி' சார்ந்த தகவலையும் ஸ்க்ரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார். அதற்கு எலான் மஸ்க் 'ஆம்' என பதில் கொடுத்துள்ளார்.
Yeah
— Elon Musk (@elonmusk) July 4, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT