Published : 28 Jun 2023 12:02 PM
Last Updated : 28 Jun 2023 12:02 PM

இந்திய சாலைகளில் 22 ஆண்டுகால பயணம்: 3 கோடிக்கும் மேற்பட்ட ‘ஆக்டிவா’ ஸ்கூட்டர்கள் விற்பனை!

ஆக்டிவா | கோப்புப்படம்

சென்னை: இந்திய இருசக்கர வாகன சந்தையில் 22 ஆண்டுகால பயணத்தை கொண்டுள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். கடந்த 2001-ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமானது. அந்த நாள் முதல் இந்த நாள் வரையில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த மைல்கல் சாதனை குறித்த தகவலை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் பகிர்ந்துள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஜூபிடர், சுசுகி அக்சஸ் மற்றும் பல ஸ்கூட்டர்கள் என விற்பனையில் கடுமையான போட்டியை சமாளித்து வருகிறது ஆக்டிவா. இருந்தாலும் விற்பனையில் வரலாறு படைத்துள்ள இந்த மைல்கல் சாதனை இந்திய ஸ்கூட்டர் வாகன சந்தையில் ஆக்டிவா செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறிப்பிட்டு சொல்லும் வகையில் அமைந்துள்ளது என ஹோண்டா நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

2001 முதல் ஆண்டுதோறும் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 வாக்கில் ஆக்டிவா விற்பனை நாட்டில் 1 கோடியை கடந்ததாகவும். 2015 - 23 காலகட்டத்தில் ஆக்டிவா விற்பனை சுமார் 2 கோடி யூனிட்கள் விற்பனை நடந்துள்ளதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

“ஹோண்டா ஆக்டிவாவின் அற்புத பயணத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். 22 ஆண்டுகளில் 3 கோடி யூனிட்கள் என விற்பனையில் மைல்கல்லை எட்டியது என்பது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். எங்கள் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இந்த சிறப்பான சேவையை வழங்குவோம்” என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர் சுட்சுமு ஒடானி தெரிவித்துள்ளார்.

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் தான் ஹெச்எம்எஸ்ஐ. இந்தியாவில் ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடம் அமைந்துள்ளது. இங்கிருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ஆக்டிவா, ஆக்டிவா 125 பிஎஸ்-6 என ஆக்டிவா வேரியண்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் தற்போது ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x