Published : 09 Jun 2023 04:35 AM
Last Updated : 09 Jun 2023 04:35 AM
பாலசோர்: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும், அதிநவீன 'அக்னி ப்ரைம்' ஏவுகணை நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு `அக்னி' ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1-5 என படிப்படியாகத் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக அக்னி-6 ஏவுகணையை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், அக்னி ரக ஏவுகணைகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன், கூடுதல் அம்சங்களை சேர்த்தும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையிலும் ‘அக்னி ப்ரைம்’ என்ற புதிய தலைமுறை ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையை கடந்த 2021 ஜூன் மாதம் டிஆர்டிஓ முதல்முறையாகப் பரிசோதித்தது. இது வெற்றிகரமாக அமைந்ததால், 2021 டிசம்பரில் 2-வது முறையாகவும், 2022 அக்டோபரில் 3-வது முறையாகவும் இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆயுதப் படையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய, இரவு நேரப் பரிசோதனை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
ஒடிசா கடற் பகுதியில் உள்ள, ஏபிஜே.அப்துல் கலாம் தீவில் டிஆர்டிஓ இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. இதில், `அக்னி ப்ரைம்' ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணை 1,000 கி.மீ. முதல் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். மேலும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனும் உடையது. அதேபோல, `அக்னி ப்ரைம்' ஏவுகணைகளை ரயில், சாலை உள்ளிட்ட எந்த இடத்திலிருந்தும் ஏவ முடியும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக கொண்டுசெல்ல முடியும். அக்னி-3 ஏவுகணையின் எடையைவிட, `அக்னி ப்ரைம்' ஏவுகணையின் எடை 50 சதவீதம் குறைவாகும். அதிநவீன ரேடார்கள் மூலம் இந்த ஏவுகணை செல்லும் பாதையைக் கண்காணிப்பதுடன், அதை வழிநடத்தவும் முடியும்.
நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட சோதனையில், ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாகச் செயல்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கூறும்போது, “அக்னி ப்ரைம் ஏவுகணை ஏற்கெனவே 3 முறை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக இரவு நேரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நவீன சாதனங்கள் மூலம் ஏவுகணை செலுத்துப்பட்ட பாதை முழுவதும் கண்காணிக்கப்பட்டன” என்றனர்.
அக்னி ப்ரைம் ஏவுகணையை ஆயுதப் படையில் சேர்ப்பதற்கு வழிவகுத்துள்ள இந்தப் பரிசோதனையை டிஆர்டிஓ மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கமாண்டர்கள் பார்வையிட்டனர். "இந்த வெற்றி, ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும்" என்று அவர்கள் தெரிவித்தனர். ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பாது காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment