Published : 08 Jun 2023 02:50 PM
Last Updated : 08 Jun 2023 02:50 PM

உலகின் முதல் சோடியம் பேட்டரி: சாதனை முயற்சியில் மதுரை லாரி ஓட்டுநரின் மகள்

சுபத்ரா.

மதுரை: தூங்கா நகரமான மதுரை சினிமாவுக்கும், ஆன்மிக, கலாச்சார திருவிழாக்களுக்கு மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. மதுரையில் வசிக்கும் எளிய மக்களின் சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மதுரையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சுபத்ரா தனது படிப்பால் புதிய கண்டுபிடிப்பின் வெற்றி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராஜேந்திரன் மகள்தான் சுபத்ரா. தனது படிப்பு மூலம் இஸ்ரோவில் 2005-2006-ம் ஆண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் சுபத்ரா விஞ்ஞானியாகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர், துபாய், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஆசியா, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். புதிய கண்டுபிடிப்பால் சாதிக்க வேண்டும் என இலக்குடன் அப்பணியில் இருந்து விலகினார்.

தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மக்கள், படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பாட்டரிக்கு மாற்றாக, சோடியம் பாட்டரி பயன்படுவத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவரது ஆராய்ச்சி வெற்றிபெற்றால், குறைந்தவிலைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கும். தற்போது சென்னையில் சொந்தமாக ஆட்ரல் ஈஎஸ்பி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

குடும்பத்தின் முதல் பட்டதாரி: இது குறித்து சுபத்ரா கூறியதாவது: எனது அப்பா, அம்மா பெரியளவில் படிக்கவில்லை. நான்தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி. என்ன படிக்க வேண்டும் என்று தெரியாமலேயே பட்டயப்படிப்பில் பாலிமர் டெக்னாலஜி படித்தேன். உடனடியாக எனக்கு வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்தனர்.

நான் மேலும் படிக்க ஆசைப்பட்டேன். அம்மா, என்னோட ஆசையை அப்பாவுக்குப் புரிய வைத்ததன் மூலம் பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எனது ஆசைக்கு தீனிபோடும் வகையில் இஸ்ரோவில் வேலை கிடைத்தது. ஆனால், குறிப்பிட்ட வளையத்தில் ஒரே சிந்தனைக்குள் என்னோட ஆராய்ச்சியை முடக்க விரும்பவில்லை.

எனது தனித் திறமையையும், ஆராய்ச்சியையும் வெளிப்படுத்தி நாட்டின் வளர்ச்சியில் ஏதாவது ஒரு வகையில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்ரோவில் இருந்து வெளியேறினேன். ஆனால், அதன்பிறகு பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தாலும் பல்வேறு சூழல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டேன்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் நமது நாட்டில் தயாரிப்பதில்லை. சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். பெட்ரோல், டீசல் போன்றதுதான் லித்தியமும். அனைவரும் லித்தியத்துக்கு மாறினால், அதற்கும் பற்றாக்குறை ஏற்படும். ஆனால், சோடியம் அப்படி கிடையாது. அதனாலே, லித்தியம் பேட்டரிக்கு பதிலாக சோடியம் பேட்டரி தயாரிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

சோடியம் பேட்டரி வணிகத்துக்கு வந்தால் 30 சதவீதம் விலை குறையும். தற்போது எங்கள் தயாரிப்புக்கு பேட்டன் வாங்க விண்ணப்பித்துள்ளோம். அடுத்து சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைக்கு அனுப்பி உள்ளேன். இதற்கு அனுமதி கிடைத்து விற்பனைக்கு வந்தால் உலகத்திலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் சோடியம் பேட்டரி விற்பனைக்கு வந்ததாக இருக்கும்.

ஆராய்ச்சித் துறைகளில் ஆண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும், அங்கீகாரமும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. அதனாலே, அறிவியல் துறைக்கு பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வருவதில்லை. இந்தப் படிப்புகளில், துறைகளில் சேர பெண்களை ஊக்கப்படுத்துவதுதான் எனது அடுத்த குறிக்கோள்.

‘வருண் ஆதித்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவி, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறேன். மேலும், உலகளாகவிய சமூக தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராக இணைந்து அதன் மூலம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில் சொந்தமாக நிறுவனம் தொடங்கி அதன் மூலம் சாதிக்க முயற்சிக்கும் மதுரை சுபத்ரா பாராட்டுக்குரியவர்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x