Published : 01 Jun 2023 07:39 PM
Last Updated : 01 Jun 2023 07:39 PM
சேலம்: சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், இரும்பாலை அருகே உள்ளது சர்க்கார் கொல்லப்பட்டியில் உரிமம் பெற்று பட்டாசுகள் தயாரிப்பு பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருவிழாவுக்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு ஆலைகளில் இருந்து அதிக அளவில் நாட்டு வெடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், பட்டாசு தயாரிப்புக்கான மருந்துகளும் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பு தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், சர்க்கார் கொல்லப்பட்டியில் கந்தசாமி என்பவர் உரிமம் பெற்று பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இன்று கந்தசாமியின் மகன் சதீஷ் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு குடோனில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மாலை 4 மணி அளவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தீயில் கருகி தூர வீசப்பட்டனர். பட்டாசு குடோன் உரிமையாளர் சதீஷ் (35), நடேசன் (50) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட மூன்று பேர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
வெடிவிபத்து நடந்த பகுதியில் வசித்து வந்த பலரும் சம்பவ இடம் வந்து, தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு இரும்பாலை போலீஸார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31), பிருந்தா (28) ஆகிய ஆறு பேர் பேர் பலத்த தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெடி விபத்து சம்பவம் குறித்தும், பட்டாசு குடோனுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக சேலம் இரும்பாலை போலீஸார் வெடி விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (50), சதீஷ்குமார் (35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT