Published : 01 Jun 2023 05:44 PM
Last Updated : 01 Jun 2023 05:44 PM
சென்னை: டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், இதற்கு ஆதரவு கோரி பல்வேறு மாநில முதல்வர்களையும் அவர் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மானும் உடனிருந்தார்.
முன்னதாக, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி அண்மையில் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT