Published : 01 Jun 2023 04:40 PM
Last Updated : 01 Jun 2023 04:40 PM
தூத்துக்குடி: "பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு ஏதாவது ஒரு திட்டத்தை வைத்திருந்தால்தான், மத்திய அரசிடம் இருந்து நிதி வரும்போது அதை பயன்படுத்த முடியும். ஆனால், இங்குதான் திட்டமே இல்லையே. அதனால்தான் அந்த நிதியை மீண்டும் மீண்டும் தமிழக அரசு அனுப்பி வருகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜூலை 9ம் தேதி எங்களுடைய நடைபயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த நடைபயணம் முழுவதுமே ஊழலைப் பற்றித்தான் இருக்கப் போகிறது. ஜூலை முதல் வாரத்தில் DMK Files இரண்டாம் பாகத்தை வெளியிடப் போகிறோம். அதுவரை காத்திருங்கள்" என்றார்.
மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி நிதியை தமிழக அரசு திரும்பி அனுப்பியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக அரசைப் பொறுத்தவரை, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக வரும் நிதியை முழுமையாக பயன்படுத்தாமல், தற்போது மட்டுமல்ல திமுக ஆட்சியின்போதெல்லாம் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் உள்ளனர். காரணம் அவர்களிடம் திட்டங்களும், செயல்பாடுகளும் இல்லை.
ஆதிதிராவிடர் நலத் துறை நடத்தும் விடுதிக்கு செல்லும் யாரும் அதை விடுதி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான். அனைத்து விடுதிகளுமே தரம் குறைவானவையாகவே இருக்கிறது. எந்த விடுதியுமே மாணவர்கள் தங்கும் அளவில் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பெயரளவுக்கு ஒரு துறை, பெயரளவுக்கு ஒரு அமைச்சர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை.
மாநில அரசிடம் ஏதாவது ஒரு திட்டத்தை வைத்திருந்தால்தான், மத்திய அரசிடம் இருந்து நிதி வரும்போது அதை பயன்படுத்த முடியும். ஆனால், இங்குதான் திட்டமே இல்லையே. அதனால்தான் அந்த நிதியை மீண்டும் மீண்டும் தமிழக அரசு அனுப்பி வருகிறது. இது ஒரு வருத்தமான விஷயம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடந்த தமிழக பாஜகவின், ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT