Published : 01 Jun 2023 04:07 PM
Last Updated : 01 Jun 2023 04:07 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அத்தனை ஆறுகளிலும் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை தீர்வில்லாமல் தொடரும் நிலையில், நம்பியாற்றின் நிலையோ கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. ஒருகாலத்தில் இந்த ஆற்றங்கரையில் நிரம்பியிருந்த மணலை அள்ளி இயற்கைக்கு துரோகம் விளைவித்திருந்த நிலையில், தற்போது சாக்கடை ஓடும் ஆறாக மாற்றப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரி, திருக்குறுங்குடி பகுதிகளில் நம்பியாறு உற்பத்தியாகிறது. வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகள் இதனுடன் இணைகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் நம்பி மலையில் அருவியாக கொட்டுகிறது. தற்போதைய கோடையிலும் லேசாக இங்கு தண்ணீர் கசிகிறது. அருவியின் அருகே இயற்கையாக அமைந்த பள்ளம் இருக்கிறது.
அதனை நிரப்பிய பின்னர் வனப்பகுதி வழியாக ஓடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகிறது நம்பியாறு. வனப்பகுதியில் மட்டுமே நம்பியாற்றில் நல்ல தண்ணீரை பார்க்க முடியும். மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் ஆறு சாக்கடையாக உருமாற்றப்பட்டுவிட்டது. வனப்பகுதியிலிருந்து திருக்குறுங்குடி, ஏர்வாடி, சிறுமளஞ்சி, ராஜாக்கள்மங்கலம், சித்தூர், ஆற்றங்கரை பள்ளிவாசல் வழியாக ஓடி உவரி அருகே கடலில் கலக்கிறது.
ஆறு செத்துவிட்டது: நம்பியாற்றின் அருமை பெருமைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த ஆறு முழுக்க மணல் நிரம்பியிருந்தது. நாளடைவில் ஆற்று மணலை அள்ளி எடுத்து அழித்துவிட்டனர். கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் இந்த ஆற்றின் மணலில் பள்ளம் தோண்டி தண்ணீர் எடுத்து சென்ற காலம் உண்டு. அந்தளவுக்கு தண்ணீரை ஆறு சேமித்து வைத்திருந்தது. கோடை காலங்களிலும், விழா காலங்களிலும் இந்த ஆற்றின் மணல் பரப்பில் மக்கள் படுத்துறங்கினர்.
சித்தூரின் பங்குனி உத்திரம், ஆற்றங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா போன்ற விழாக்களால் ஆற்றங்கரை களைகட்டியிருக்கும். ஆனால் இப்போது ஆற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை . இது நம்பியாறு இல்லை, அது செத்துவிட்டது. நம்பியாற்றுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டோம்” என்று, வேதனை தெரிவித்தனர்.
திருக்குறுங்குடி, ஏர்வாடி, சிறுமளஞ்சி, ராஜாக்கள்மங்கலம் பகுதிகளில் ஆறு சாக்கடை வழிந்தோடும் பகுதியாக இருக்கிறது. ஆற்றின் வழித்தடங்கள் முழுக்க புதர் மண்டியிருக்கிறது. திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பெருமளஞ்சி அருகே சாக்கடையாக கடக்கிறது. ஏர்வாடியின் ஒவ்வொரு தெருவும் நம்பியாற்றில் சென்றுதான் முடிகிறது. தெருவின் சாக்கடைகள் அனைத்தும் நம்பியாற்றில்தான் கலக்கின்றன. இதுபோல் திருக்குறுங்குடி பேரூராட்சியிலும் அத்தனை குடியிருப்புகளில் இருந்தும் நேரடியாக ஆற்றில் சாக்கடை கலந்து வருகிறது.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் கூறும்போது, “நம்பியாறு ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருங்கிவிட்டது. இந்த ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளின் சாக்கடை கழிவுநீரும் எவ்வித தடையுமின்றி ஆற்றில் கலக்கிறது. கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள். ஆனால் முறையாக எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்புவரை உயிரோட்டமாக இருந்த ஆற்றில் இருந்து மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டது.
தற்போது ஆற்றங்கரையிலிருந்து நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறுஞ்சுகிறார்கள். நம்பியாற்றை காக்க வேண்டுமானால் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய சர்வே செய்து ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாக்கடை கலப்பதை தடுக்க உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நம்பியாறு பயன்படும். இல்லாவிட்டால் திருநெல்வேலி மாவட்டத்தின் கூவம் ஆறாகவே இது மாறிவிடும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT