Published : 01 Jun 2023 06:34 AM
Last Updated : 01 Jun 2023 06:34 AM
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கிளை வாய்க்கால்களை தூர் வார தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,065 கி.மீ தொலைவுக்கு தூர் வார 189 பணிகளுக்கு ரூ.20.45 கோடியும், திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் கி.மீ தொலைவுக்கு 111 பணிகளுக்கு ரூ.12.89 கோடியும், நாகை மாவட்டத்தில் 301 கி.மீ தொலைவுக்கு 28 பணிகளுக்கு ரூ.3.97 கோடியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 749 கி.மீ தொலைவுக்கு 51 பணிகளுக்கு ரூ.8 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, ஆறுகள், ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்களை தூர் வாருவதுபோல, கிளை வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வாரவும் முக்கியத்துவம் அளிப்பதுடன், இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மண்ணுக்கு முண்டான் கிராம விவசாயி தெய்வமணி கூறியதாவது: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நீர்நிலைகளை பராமரிப்பு செய்வதற்காக மொத்தமாக ஒதுக்கியுள்ள ரூ.52 கோடியே 32 லட்சம் நிதி போதுமானது அல்ல. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அணை திறப்புக்கு குறுகிய நாட்களே உள்ளதால் முதல்வர் வருகைக்கு முன்பாகவே கிளை வாய்க்கால்கள் தூர் வாரும் பணியையும் தொடங்க வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பில் நீர் வழித்தடங்கள் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் கூறியதாவது: ஆறுகளை தூர் வாருவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், கிளை வாய்க்கால்களுக்கு கொடுப்பதில்லை. ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படுகின்றன. ஆனால், உள் கிராமங்களில் வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகள் பெயரளவில் நடைபெறுகின்றன. சி பிரிவு வாய்க்கால்கள் தூர் வாரும் பணி பல ஆண்டுகளாக முழுமையாக, முறையாக நடைபெறவில்லை.
இதனால் இந்தவாய்க்கால்களின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர் வார வேண்டும் என்றார்.
உரிய வழிகாட்டுதல் தேவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது: நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விளைநிலங்களுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதிப்படுத்த நீர் வளத் துறை அமைச்சகம் உரிய வழிகாட்டுதல்களை செய்துள்ளதாக தெரியவில்லை.
ஏற்கெனவே பொதுப்பணித் துறையில் இருந்தபோது நீர்வள ஆதாரப் பிரிவின் கீழ், என்னென்ன பணிகள் மேற்கொண்டார்களோ, அதே பணிகளைத்தான் தற்போதும் மேற்கொள்கிறார்கள். நீர் வழித் தடங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் வழிகாட்டுகிற வகையில் அமைச்சகம் செயல்பட வேண்டும் என்றார்.
ஜூன் 5, 6-ம் தேதிகளில் முதல்வர் ஆய்வு? - டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 6-ம் தேதியும் தூர் வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, ஒதுக்கீடு செய்த நிதி முழுவதும் தூர் வாரும் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா என்பதை முதல்வர் ஆய்வு செய்வதுடன், கிளை வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வாருவதற்கென சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT