Last Updated : 01 Jun, 2023 02:34 PM

 

Published : 01 Jun 2023 02:34 PM
Last Updated : 01 Jun 2023 02:34 PM

புதுச்சேரி | 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

புதுச்சேரி ஆளுநரிடம் மனு

புதுச்சேரி: 200 மருத்துவ இடங்களை உயர்த்தியுள்ள 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இடங்களை புதுச்சேரி அரசுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் தமிழிசையிடம் அதிமுக மனு தந்துள்ளது.

புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று சென்ற ஆளும் அரசின் கூட்டணியிலுள்ள புதுச்சேரி அதிமுக மாநில துணைச்செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன், துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் உள்ள விவரம் பின்வருமாறு: "புதுச்சேரி மாநிலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசுக்கு வழங்குவதாக உறுதியளித்த பின்னரே கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்லூரிகளில் 4 கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டன. இதனால் நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக ஒரு மருத்துவ இடம்கூட புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.

புதுச்சேரியில் மீதம் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை. ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை மூலம் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய சூழலில் வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர் என்ற 2 மருத்துவக் கல்லூரிகளும் கூடுதலாக தலா 100 மருத்துவ இடங்களை உயர்த்திக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையத்திடம் முதல்கட்ட அனுமதியை பெற்றுள்ளன. இதில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ இடங்களை உயர்த்திக்கொள்ள புதுச்சேரி அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மணக்குள விநாயகர் கல்லூரிக்கான அனுமதி வழங்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

புதுச்சேரி மாநில ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற தற்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 200 மருத்துவ இடங்களை உயர்த்தியுள்ள 2 மருத்துவ கல்லூரிகளும் 50 சதவீத இடங்களை புதுச்சேரி அரசுக்கு கட்டாயம் ஒதுக்கினால்தான் புதுச்சேரி அரசு தடையில்லா சான்று வழங்கும் என நிர்பந்திக்க வேண்டும். ஏற்கனவே வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு வழங்கியுள்ள தடையில்லா சான்றை ரத்து செய்துவிட்டு, புதிய நிபந்தனையை விதிக்க வேண்டும்.

மணக்குள விநாயர் மருத்துவ கல்லூரிக்கும் இந்த நிபந்தனையோடு தடையில்லா சான்று வழங்க வேண்டும். இதன் மூலம் 100 ஏழை புதுச்சேரி மாநில மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆளுநர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x