Published : 01 Jun 2023 12:55 PM
Last Updated : 01 Jun 2023 12:55 PM
சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத் தேவையாகும். இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடித் தீர்வு காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத் தேவையாகும். இந்த விவகாரத்தில் முதல்வர் உரிய கவனம் செலுத்தி, உடனடித் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என தினகரன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT