Published : 01 Jun 2023 04:08 AM
Last Updated : 01 Jun 2023 04:08 AM
தருமபுரி: இரண்டு லட்சம் ஏழை மக்களின் 50 கிலோ மீட்டர் தூர அலைச்சலுக்கு தீர்வு ஏற்படுத்தக் கூடிய 1.5 கிலோ மீட்டர் நீள சாலையை பல ஆண்டுகளாக அமைக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நேற்று (புதன்) தருமபுரியில் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோம்பேரி பகுதியில் சிறு, சிறு மலைப்பகுதிகள் உள்ளன. இதில், 2 சிறிய மலைகளுக்கு இடையில் கணவாய் போன்ற ஒரு பகுதி உள்ளது. இவ்வழியாக சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக சாலை அமைத்தால் இப்பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூர வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். இந்த சாலை அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சியினரும் இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (புதன்) மாலை கோம்பேரி பகுதிக்கு நேரில் சென்று இணைப்பு சாலை அமைக்கக் கோரும் பகுதியை ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கோம்பேரி பகுதியில் மலையடிவாரம் வரை சாலை உள்ளது. அதேபோல, இந்த மலையின் கிழக்கு பகுதி அடிவாரத்தில் உள்ள காளிகரம்பு கிராமம் வரை சாலை உள்ளது. இடைப்பட்ட 1.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைத்தால் இணைப்பு ஏற்பட்டு விடும். இதன்மூலம், தருமபுரியில் இருந்தும், நல்லம்பள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, லளிகம், கோம்பேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லும் நிலை உருவாகும்.
இந்த இணைப்புச் சாலை வேண்டி தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மூலம், வனப்பகுதியில் சாலைக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிலத்துக்கு ஈடாக நெக்குந்தி என்ற பகுதியில் நிலம் வழங்கப்பட்டு, அந்த நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்க பணமும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த சாலைக்கான அனுமதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை தொடர்ச்சியாக கண்காணிக்காமல் விட்டதால் வழக்கின் தீர்ப்பு அனுமதி வழங்குவதற்கு எதிராக மாறிவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு தற்போதாவது முயற்சிகள் மேற்கொண்டு அனுமதி பெறுவதுடன், விரைந்து சாலை அமைத்துத் தர வேண்டும். இணைப்புச் சாலை அமைக்கக் கோரும் இப்பகுதி வழியாக அண்மையில் பவர் கிரிடு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எளிதாக அனுமதி அளிக்கப்படும்போது, சுமார் 2 லட்சம் ஏழை, எளிய மக்களின் போக்குவரத்துக்கு பேருதவியாக அமைய உள்ள இணைப்புச் சாலையை அமைத்துத் தருவதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது. இந்த சாலைக்கான கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT