Published : 01 Jun 2023 07:03 AM
Last Updated : 01 Jun 2023 07:03 AM
சென்னை: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்: கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார்.
மேகேதாட்டு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிரான கர்நாடக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.
மேகேதாட்டு அணை குறித்துவிவாதிக்க காவிரி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த தடையை அகற்றும் முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. இதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழகஅரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். அதற்கான சட்ட, அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமேதெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடக அரசு பேசி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதை தொடர்ந்து மீறி வருவது, இருமாநில உறவுகளுக்கும், மக்களுக் கும் நல்லதல்ல.
மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் முதல்வர் உடனே தலையிட்டு, கர்நாடக அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி, உரிய தீர்வு காண வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், மேகேதாட்டு அணையை விரைவில் கட்டுவோம் என்று கூறி இருப்பது தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் ஒரு கொதிப்பு நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை எந்த காலத்திலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். அது சற்று விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு மேகேதாட்டு அணை விஷயத்தில் உடனடியாக கர்நாடக அரசின் செயலைக் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகமெங்கும் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT