Published : 01 Jun 2023 07:15 AM
Last Updated : 01 Jun 2023 07:15 AM
சென்னை: நிலவை ஆராய்வதற்காக வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதிவிண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி ‘லேண்டர்’ கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆர்பிட்டர்’, நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ.615 கோடியில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே, நிலவை ஆர்பிட்டர் சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, விண்ணில் செலுத்துவதற்கான முன்கட்டப் பணிகளுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் சிலநாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இறுதிகட்ட சோதனைகளுக்கு பிறகு, ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும். சந்திரயான்-2 போல அல்லாமல், 42 நாட்களில் லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT