Published : 01 Jun 2023 07:16 AM
Last Updated : 01 Jun 2023 07:16 AM
சென்னை: ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை நிறுத்தி வைப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் உறுதி அளித்தன.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிக்கும் பணிகளை நிர்வாகங்கள் மேற்கொண்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிஐடியு தொழிற்சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர்.
இந்நிலையில், இந்த விவகாரம்தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் தனி இணை ஆணையர்வேல்முருகன், 8 போக்குவரத்துக் கழகங்கள் தரப்பிலான அதிகாரிகள், சிஐடியு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகுமார், துணை பொதுச்செயலாளர்கள் எம்.கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட 18 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் போக்குவரத்து நிர்வாகப் பிரதிநிதிகளிடம் தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போதைய நிலையின் தீவிரத் தன்மை அறியாமல் நிர்வாகங்கள் செயல்படுகின்றன. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைநிறுத்தம்அளவுக்கு பிரச்சினை சென்றுவிட்டது. தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.
இதுதொடர்பாக அமைச்சர், செயலர் உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்த வேண்டும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜூன் 9-ம் தேதி நடைபெறும். அப்போது அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை நிறுத்தி வைப்பதாக நிர்வாகங்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராஜன் கூறியதாவது: கடந்த பேச்சுவார்த்தைகளில், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என நிர்வாகத்துக்கும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியது. இதையும் மீறி அண்மையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வந்ததால், திடீர் வேலைநிறுத்தம் நடை பெற்றது.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என நிர்வாகங்கள் தெரிவித்தன. இதன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த உத்தரவாதத்தை மீறினால் வேலைநிறுத்தம் வரலாம்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT