Published : 01 Jun 2023 07:30 AM
Last Updated : 01 Jun 2023 07:30 AM

7,000 டன் நெல் காணாமல் போனதாக தகவல் | தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி

தருமபுரி அடுத்த வெத்தலைக்காரன் பள்ளம் திறந்தவெளி நெல் கிடங்கில் ஆய்வு நடத்திய ஆட்சியர் சாந்தி

சென்னை / தருமபுரி: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை காணவில்லை என்ற செய்தி வந்ததும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருப்புவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவுஅதிகாரிகள் (சென்னை) கடந்த சில நாட்களாக தருமபுரி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22,273 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 டன் இருப்பு உள்ளது. இதில்இருந்துதான் 7 ஆயிரம் டன் இருப்பில் இல்லை என்று ஒரு தரப்பினர் முரணாக கூறுவதாக செய்தி வந்தது.

இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநரையும் அந்த கிடங்கில், 100 சதவீதம் தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய உத்தரவிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு, வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்துவரும் முதல்வர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தன்னால் செய்ய முடியாத ஒன்றை செய்கிறாரே என்ற பொறாமையின் உச்சகட்டத்தில், செய்தியை ஆராயாமல் வசவுகளை எதிர்க்கட்சித் தலைவர் அள்ளித் தெளிக்கிறார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிடங்கில் ஆட்சியர் ஆய்வு: இந்நிலையில், வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இருந்து சமீபத்தில் 22,273 டன்நெல் மூட்டைகள் வெத்தலைக்காரன் பள்ளம் திறந்தவெளி நெல்கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மூட்டைகள், 130 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதன்மீது அடுக்கி இருப்பு வைக்கப்பட்டது.

இவ்வாறு இருப்பு வைக்கப்படும் மூட்டைகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரவை ஆலைகளுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக்கி பெறப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வைக்கப்படும். அதன் பின்னர், ரேஷன் உள்ளிட்டதேவைகளுக்கு பயன்படுத்தப்படும். அந்த வகையில் 22 ஆயிரம்டன் நெல் மூட்டைகளில் இருந்து 7,174 டன் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 15,098 டன் நெல் மூட்டைகள் கிடங்கில் இருப்பில் உள்ளன.

மாயமாக வாய்ப்பு இல்லை: அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7,174 டன் நெல் மூட்டைகள்தான் மாயமாகிவிட்டதாக யாரோ தகவல் பரப்பியுள்ளனர். கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பு இல்லை. இருப்பினும் புகார் எழுந்ததன் அடிப்படையில் கணக்கெடுப்பதற்காக மூட்டைகள் தற்போது அரவை ஆலைகளுக்கும், வேறு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நெல் மூட்டை மாயம் என்பது மிகைப்படுத்தப்பட்ட தகவல். இருப்பினும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x