Published : 01 Jun 2023 07:40 AM
Last Updated : 01 Jun 2023 07:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக 2016-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு தமிழக அரசு விருது வழங்கியது. அதேபோல் 2021-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு இந்த விருது கிடைத்தது.
இந்த விருது பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்களோடு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகளும், ஊழியர்களும் முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையில் திடீரென ஒரு வாரத்துக்கு முன்பு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது பேச்சு மற்றும் கேட்டல் பயிற்சியாளர், செயல்திறன் பயிற்சியாளர் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளனர். முக்கியமான 3 அதிகாரிகளை மாற்றியிருப்பது மாற்றுத்திறனாளிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது:
காரணம் என்ன?: சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடம், கூடுதல் பொறுப்பாக புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரே சமயத்தில் 2 பயிற்சியாளர்களையும் இடமாறுதல் செய்துள்ளது வேதனை அளிக்கிறது.
அவர்களுக்கு பதிலாக வேறு யாரையும் நியமிக்கவில்லை. அலுவலர், பயிற்சியாளர்கள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும், நலத்திட்டங்கள் கிடைப்பதிலும் தொய்வு ஏற்படும்.
சில தொண்டு நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகவே அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர். சிறப்பாக செயல்பட்டு வந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து, சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT