Published : 01 Jun 2023 07:49 AM
Last Updated : 01 Jun 2023 07:49 AM
கரூர் / கோவை: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் மே 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் வடக்கு காந்தி கிராமம் முல்லை நகரில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த்தின் அலுவலக ஊழியரான ஷோபனா வீட்டில் தொடர்ந்து 6-வது நாளாக நேற்று வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மேலும், மே 29-ம் தேதி ஷோபனாவை காரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய வருமான வரித் துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் கரூர் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள எம்.சி.சங்கர் ஆனந்த் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோல, கரூர் சின்னாண்டாங்கோவில் ஏகேசி காலனியில் உள்ள மளிகைக் கடை அதிபர் தங்கராசு வீட்டில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், கரூர் வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்திலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் நிறைவு: இதேபோன்று, கோவையில் 2 இடங்களில் நேற்றும் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, வருமானவரித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘கோவையில் நடைபெற்று வந்த சோதனை இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT