Published : 31 May 2023 09:00 PM
Last Updated : 31 May 2023 09:00 PM
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக அதிமுகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தல்களை சந்தித்துள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல்வேறு கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் வள கொள்ளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகவும், பொதுமக்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பிரச்சினைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதுதொடர்பான தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தும் வந்தார். மேலும், கட்சி சார்ந்த அறிவிப்புகள், அறிக்கைகள் உள்ளிட்டவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மட்டுமின்றி, அக்கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளும் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT