Published : 31 May 2023 06:07 PM
Last Updated : 31 May 2023 06:07 PM
சென்னை: "கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது போல் இப்போது காவிரியையும் தாரை வார்க்க தயாராகி விட்டீர்களா?" என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் மேகதாது அணையை கட்டியே தீருவோம், எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அதை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேகதாது அணை விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலம் இடையே இருந்து வரும் நிலையில் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாக தமிழக உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும். அணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி பெற தேர்தல் பணிக்குழு அமைத்து கர்நாடக மாநில திமுகவினருக்கு திமுக தலைமை சுற்றறிக்கை அனுப்பியது. மேகதாது அணை கட்டுவதற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி திமுகவிற்கு தெரியாதா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேகதாது அணையை கட்ட எந்த முயற்சியும் எடுக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியிடம் திமுக ஏன் கேட்கவில்லை? காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்டதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட திமுக மறைமுக ஆதரவு அளிப்பது காவேரியை நம்பியுள்ள தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.
மேலும் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் பங்குபெற்றபோது மேகதாதுவில் அணை உட்பட தேர்தல் வாக்குறுதியில் கூறியது அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது போல் இப்போது காவிரியையும் தாரை வார்க்க தயாராகி விட்டீர்களா?
மேகதாதுவில் அணை கட்டும் முடிவை சிவக்குமார் திரும்பப் பெற வேண்டும். திராவிட மாடல் திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் தமிழக அரசு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அணைக்கட்டும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டுமென தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT