Published : 31 May 2023 12:20 PM
Last Updated : 31 May 2023 12:20 PM

தருமபுரியில் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எதிரொலி - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தருமபுரி அடுத்த வெத்தலைக்காரன் பள்ளம் திறந்தவெளி நெல் கிடங்கில் ஆய்வு நடத்திய ஆட்சியர் சாந்தி

தருமபுரி: தருமபுரியில் நுகர் பொருள் வாணிபக் கழக திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமாகி இருக்க வாய்ப்பில்லை என ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியுள்ளார்.

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் இருந்த 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் (சென்னை) கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி நுகர்வோர் வாணிபக் கழகக் கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (புதன்) வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் ஆட்சியர் கூறியது: "டெல்டா மாவட்டங்களில் இருந்து அண்மையில் 22 ஆயிரத்து 273 டன் நெல் மூட்டைகள் தருமபுரி வெத்தலைகாரன் பள்ளம் திறந்தவெளி நெல் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு 130 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. இந்த நெல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரவை ஆலைகளுக்கு அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் 7 ஆயிரத்து 174 டன் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர 15 ஆயிரத்து 98 டன் நெல் மூட்டைகள் கிடங்கில் இருப்பில் உள்ளன. அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7,174 டன் நெல் மூட்டைகளை தான் மாயமாகி இருப்பதாக யாரோ தகவல் பரப்பி உள்ளனர். கிடங்கில் இருந்து நெல் மூட்டையில் மாயமாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் புகார் அடிப்படையில் மூட்டைகளை கணக்கெடுக்க 100 பணியாளர்கள் 100 லாரிகளில் மூட்டைகளை ஏற்றி மற்றொரு கிடங்குக்கு மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. நெல் மூட்டைகள் மாயம் என்ற தகவல் மிகைப்படுத்தப்பட்ட தகவல். இருப்பினும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என ஆட்சியர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x