Published : 31 May 2023 05:36 AM
Last Updated : 31 May 2023 05:36 AM

திருப்பூர் சு.துரைசாமியின் விலகல் அறிவிப்பும்.. வைகோவின் விளக்கமும்..

‘மதிமுக நடத்துவது வீண் வேலை’ - திருப்பூர் சு.துரைசாமி

திருப்பூர்: மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக மதிமுக மாநில அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.இ.சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு கடந்த 29-ம் தேதி (நேற்று முன்தினம்) அனுப்பி உள்ளேன்.

இனி, நான் திமுக உட்பட எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை. அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்குகிறேன். ஆனால் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கவில்லை.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலிலும் மதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து, திமுகவில் இணைந்து தான் சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டோம். அப்படியென்றால், நாம் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டோம். இனி, தனியாக மதிமுக என்ற கட்சி நடத்த வேண்டிய நிலை இல்லை. இனியும் மதிமுக நடத்துவது வீண் வேலை. ஆகவேதான் மதிமுகவை திமுகவுடன் இணைக்கச் சொல்கிறேன்.

வைகோ சொல்வதை நான் பலமுறை எதிர்த்துள்ளேன். பேச ஆரம்பித்தால் எல்லை தாண்டுவார். அதேபோல் விமர்சனம் செய்தாலும் எல்லை தாண்டுவார். ஒருமுறை, கருத்து முரண்பாடு ஏற்பட்டபோது, தன்னுடைய தவறை உணர்ந்து வைகோ என்னிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அது என்னிடம் பத்திரமாக உள்ளது.

கோயமுத்தூர் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கும் மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக தொடர்கிறேன்.

கரோனா காலகட்டத்துக்கு பிறகுதானே துரை வைகோ கட்சிக்குள் வந்தார். மதிமுகவில் வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யா உள்ளார். மல்லை சத்யா கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்கு பாடுபட்டவர். ஆற்றல் உள்ளவர். மதிமுகவில் அவருக்கு பொறுப்பு கொடுக்கலாம். ஆனால் கட்சிக்கு பாடுபட்டவர்களை ஒதுக்கும் நிலைதான் இன்றைக்கு மதிமுகவில் உள்ளது. இனி என் வாழ்நாளில் எந்த அரசியல் கட்சிக்கும் செல்வதாக இல்லை” என்றார்.

வைகோவுக்கு அனுப்பிய 3 பக்கவிலகல் கடிதத்தில், பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ - வைகோ

சென்னை: என் மீது திருப்பூர் துரைசாமி தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ நேற்று கூறியதாவது:

மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து நான் தெரிவித்தாக வேண்டும்.

தமிழகத்தில் திராவிட இயக்க கோட்பாட்டை சாய்க்கவும், சரிக்கவும் இந்துத்துவா சனாதன சக்திகள் முயற்சிப்பதை தடுக்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. அதனடிப்படையில்தான் திமுகவுடனான கருத்து ஒற்றுமை குறித்து ஸ்டாலினிடம் பேசினேன். அவரும் கருணாநிதியிடம் அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் கண்ணீர் கசிந்தது. ‘உங்களுக்கு எப்படி பக்கபலமாக இருந்தேனோ அதுபோல ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருப்பேன்’ என்று கருணாநிதியிடம் உறுதி அளித்தேன். இதை நானும், ஸ்டாலினும் அவரவர் கட்சிக் கூட்டங்களில் பேசினோம்.

அப்போது, திமுக – மதிமுக கூட்டணி கூடாது. திமுக ஜெயிக்காது என்று திருப்பூர் துரைசாமி தெரிவித்தார். அதை கட்சிக் கூட்டங்களிலும் பேசினார். அதேநேரத்தில் கட்சியில் பெரும்பாலானோர் திமுக வுடன் உடன்பாடு வேண்டும் என்றனர். அதையடுத்து முக்கிய கூட்டங்களில் துரைசாமி பங்கேற்கவில்லை. தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று கூறிய துரைசாமி, திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று சொன்னதாகவும், அதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு வந்ததால் வெளியேற வேண்டிய நிலை வந்ததாகவும் கூறியிருக்கிறார். டிரஸ்ட்டாக அவர் பதிவு செய்து வைத்துள்ள கோவை பஞ்சாலை தொழிற்சங்க கட்டிடம் தொடர்பான வழக்கில் திமுக தலையிடக்கூடும் என்ற நினைப்பில் இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை.

துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் விரும்பியதால் அரசியலுக்கு வந்துள்ளார். கட்சியின் வரவு-செலவுகள் குறித்து முறையாக தணிக்கை செய்து, வருமான வரிசெலுத்தி அந்த தகவல் பொதுக்குழுவில் முழுமையாக வாசிக்கப்படுகிறது. இதில் என் நாணயத்தை குறை சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x