Published : 31 May 2023 08:09 AM
Last Updated : 31 May 2023 08:09 AM

அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தது ஐபிஎல் கோப்பை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற ஐபிஎல் கோப்பை நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான என்.சீனிவாசன், சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வென்ற ஐபிஎல் கோப்பை, அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் கோப்பைக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பை, அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சிஎஸ்கே சேர்மன் ஆர்.சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் சூட்கேஸ் மூலம் கோப்பையை சென்னைக்கு கொண்டு வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி, வெற்றிக் கோப்பைக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன், “ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என்று தோனியே தெரிவித்துள்ளார். இதுவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் யாரும் தற்போது சென்னை வரவில்லை. சென்னையில் நடக்க உள்ள வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என்றார்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து நேராக சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு கோப்பையை கொண்டு சென்றனர். தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தேவஸ்தானத்தின் உறுப்பினருமான என்.சீனிவாசன் கலந்து கொண்டார். பூஜை முடிந்த பிறகு அவரிடம் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர் சென்னை வரும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலினை கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தோனிக்கு வாழ்த்து தெரிவித்த என்.சீனிவாசன்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் சிஎஸ்கேவின் பிரதான ஸ்பான்சரான இந்தியா சிமெண்ட்ஸ், தோனியின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான என்.சீனிவாசன், தோனியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர், பிரமாதம் கேப்டன். நீங்கள் அதிசயம் நிகழ்த்தி உள்ளீர்கள். இது உங்களால் மட்டுமே முடியும். அணியில் உள்ள வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

தொடர்ந்து, தோனியை ஓய்வெடுக்க கூறிய என்.சீனிவாசன், வெற்றியைக் கொண்டாட சிஎஸ்கே அணியுடன் சென்னைக்கு வருமாறு அழைத்தார். கேப்டன் எம்எஸ் தோனி மீது சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய அதீத பாசத்தால் சீனிவாசனும் நெகிழ்ந்துள்ளார். இதுகுறித்து என். சீனிவாசன் கூறுகையில், “இந்த சீசன் ரசிகர்கள் தோனியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது. நாங்களும் அவரை நேசிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x