Published : 31 May 2023 07:34 AM
Last Updated : 31 May 2023 07:34 AM
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக ஜப்பானின் ஓம்ரான் (OMRON) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ரூ.818கோடி முதலீட்டுக்காக முதல்வர்முன்னிலையில் 6 ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று, ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவ முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஓம்ரான் கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், டிஜிட்டல் ரத்த அழுத்தமானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம், தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ‘‘ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மற்றும் வெற்றிகரமான மருத்துவ கட்டமைப்பின் மீதான உங்கள் நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத் தலைவர் அயுமு ஒகடா, செயல் அலுவலர் கசுகோ குரியாமா, வியட்நாம் பிரிவு தலைவர் டாகுடோ இவானகா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல்தொழில்நுட்ப, மின்னணு நிறுவனமான என்இசி ஃபியூச்சர் கிரியேஷன் ஹப்-க்கு சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்துக்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து மையத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT