Published : 10 Oct 2017 06:40 AM
Last Updated : 10 Oct 2017 06:40 AM
இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் தமிழர்களின் தொன்மை, சங்க கால மக்களின் நகர நாகரிகம், வைகை நதி நாகரிகம் குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர் ராஜேஷ், வீரராகவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் 102 அகழாய்வுக் குழிகளில் இருந்து 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 2 பொருட்களை மட்டும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிசிஸ் நிறுவனத்துக்கு அனுப்பி கார்பன் பகுப்பாய்வு செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் என ஆய்வு முடிவு வந்தது.
கடந்த மே 28-ம் தேதி 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், துணைக் கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ், சென்னை பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்கள் மேற்கொண்டனர்.
தாமதமாகத் தொடங்கியதால் 8 அகழாய்வுக் குழிகள் (400 சதுர மீட்டர்) மட்டுமே தோண்டப்பட்டன. இவற்றில் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
இந்நிலையில், கடந்த செப்.30-ம் தேதியோடு மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து தனியார் நிலத்தில் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழிகளை மூடும் பணி நேற்று நடந்தது.இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடும் தொல்லியலாளர்கள் தங்குவதற்காக கீழடியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் 2 கட்ட ஆய்வின்போதும், இக்கூடாரங்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட ஆய்வு நடைபெற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 3-ம் கட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில், கூடாரங்கள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டன. இதனால், நான்காம் ஆண்டு அகழாய்வு பணிகள் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழார்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, கீழடியில் இருந்த தொல்லியலாளர்களின் கருத்தை அறிய முயன்றபோது, அவர்கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT