Published : 31 May 2023 05:37 AM
Last Updated : 31 May 2023 05:37 AM
தருமபுரி: தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கில் 7,000 டன் நெல் மாயமானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவ்வப்போது கொண்டுவரப்படும் நெல்மூட்டைகள் இந்த கிடங்கில் இருப்பு வைக்கப்படும். நெல்லை அரைத்து அரிசியாக்கித் தரும் பணியை தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.
புகாரை தொடர்ந்து விசாரணை: இந்நிலையில், நெல் கிடங்குக்கு அண்மையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பதாக சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புப் பிரிவுக்கு புகார் சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் கடந்த 2 நாட்களாக தருமபுரியில் திறந்த நிலை நெல் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, நுகர்பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டல அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, கிடங்கில் பெரிய பெரிய படுக்கைகள் அமைத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முழுவதையும் ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி முடிக்கும் போதுதான் மூட்டைகள் கணக்கில் வராமல் குறைந்துள்ளதா என தெரியவரும்.
இதற்கு ஓரிரு வாரங்கள் வரை அவகாசம் தேவை. அதன்பின்னர் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் விசாரணை நடத்தி காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT