Published : 31 May 2023 05:41 AM
Last Updated : 31 May 2023 05:41 AM
கரூர்: நங்கவரம் பகுதியில் கிணற்றில் சிறுமி சடலமாக கிடந்தது தொடர்பாக, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நங்கவரம் பேரூராட்சி திமுக கவுன்சிலர், அவரது மகன் மற்றும் மைத்துனர் ஆகியோரை குளித்தலை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நங்கவரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மே 24-ம் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மே 26-ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள் மறியல்: இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் நங்கவரம் பேரூராட்சி திமுக கவுன்சிலராகவும், வரிவிதிப்பு நியமனக் குழு உறுப்பினராகவும் உள்ள குணசேகர் என்பவரின் மகன் கஜேந்திரன்(18) சிறுமியுடன் நட்புடன் பழகி வந்ததும், இதற்கு குணசேகர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், சிறுமி கிணற்றில் சடலமாக கிடந்ததையடுத்து, சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியதாக குணசேகர்(53), அவரது மகன் கஜேந்திரன், மைத்துனர் முத்தையன் ஆகிய 3 பேரை குளித்தலை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT